வேளாண்மை

யாரை ஏமாற்ற வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா?

Share

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று சொன்ன தமிழக அரசு திடீர் என்று வேளாண் மண்டல பாதுகாப்பு  மசோதாவை நிறைவேற்றி உள்ளது.

ஏதோ இதையாவது செய்தார்களே என்று பாராட்டுவதா இல்லை நீட் எழுவர் விடுதலை போன்ற விடயங்களில் காட்டிய இரட்டை வேடம் போன்றதா இதுவும் என்று குழம்பிப் போய் இருக்கிறார்கள் விவசாயிகள். 

மசோதா கொண்டு வருவதற்கு முன் விவசாயிகளிடம் கருத்து கேட்பு நடத்தியிருந்தால் இந்த கேள்வி எழுந்திருக்காது.

டெல்டா மாவட்டங்கள் மட்டும் இதில் அடங்கும் என்றால் இதர மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிப்பீர்களா?

அதிலும் குறிப்பாக கரூர், திருச்சி மாவட்டங்களை ஒதுக்கியது ஏன்?

நடைமுறையில் இருக்கும் 700 எண்ணெய் கிணறுகள் மூலம் ஒஎன்ஜிசி இடம் இருந்து கோடிக்கணக்கில் ராயல்டி வாங்கிக் கொண்டு இருக்கிறது தமிழக அரசு. அதை முதலில் நிறுத்தப் போகிறார்களா இல்லை அவை தொடர்ந்து அனுமதிக்கப்படுமா? அனுமதிக்கப்படும் பட்சத்தில் இது பாதுகாக்கப்பட்ட  மண்டலமாக எப்படி ஆகும்?

இப்போது இயங்கும் அனைத்து கிணறுகளும் ஹைட்ரோ கார்பன் எடுக்க பயன்படும் வகையில் மாற்றி அமைக்க திட்டம் இடுகிறார்களாம்.  அப்படி என்றால் இந்த சட்டத்தினால் என்ன பயன்?

ஏன் இதை மத்திய அரசு அறிவிக்க வில்லை என்ற கேள்வி மிகவும் முக்கியமானது. அல்லது மாநில அரசின் சட்டத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்றாவது மத்திய அரசு அறிவிக்க  வேண்டும்.

ஏன் என்றால் எண்ணெய் மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது.  ஆனால் வேளாண் தொடர்பு என்று மாநிலம் சட்டம் இயற்றி  இருக்கிறது.  இரண்டுக்கும் முரண் என்றால் எது நிலைக்கும்?

இல்லையென்றால் குடிஉரிமை திருத்த  சட்டத்தை அமுல்படுத்த மாட்டோம் என்று சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று  சொல்வதைப் போல எண்ணெய் கிணறுகள் தொடர்பாக  நாங்கள் மட்டுமே முடிவெடுப்போம் மாநில அரசுகள் இதில் தலையிட முடியாது என்று  மத்திய அரசு சொல்லாது என்பதற்கு என்ன உத்தரவாதம். ?

இப்போது நடத்திக் கொண்டிருக்கும் கிணறுகளில் சத்தமில்லாமல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை அமுல் படுத்த ஒன்ஜிசியும் வேதாந்தாவும் திட்டமிடுகிறார்களாம்

பேருக்கு ஒரு சட்டம். சத்தமில்லாமல் தொடரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் என்பதுதான் ஆட்சியாளர்களின் திட்டம் என்றால் அது மக்கள் மத்தியில் பெருத்த ஆட்சேபணையை உருவாக்கி  புதிய பிரச்னைகளுக்கு வித்திட்டு விடும் .

ஆட்சியாளர்கள்  கவனமுடன் அடி  எடுத்து வைக்க வேண்டும்.

வேளாண் மண்டல அதிகார அமைப்பு எந்த விதமாக செயல்படப் போகிறது என்பதை பார்த்துத்தான் எதிர்காலத்தை கணிக்க முடியும்.  மத்திய அரசுக்கு எதிராக நிலை எடுக்கும் துணிவு இவர்களுக்கு இருக்குமா?

ஆனால் ஒன்று. பாம்புக்கு  வாலையும் மீனுக்கு தலையையும் காட்டும்  தமிழக ஆட்சியாளர்களின் வித்தை நீண்டநாள் நிலைக்காது.

This website uses cookies.