மேகதாது அணை அறிக்கை தயாரிக்க அனுமதி அளித்து தமிழர்கள் முதுகில் குத்திய மத்திய அரசு??!!

megadathu-dam
megadathu-dam

மத்திய நீர் வளத்துறை கர்நாடகாவின் காவேரி நீராவரி நிகம் அமைப்பிற்கு மேகதாது அணை கட்ட திட்ட அறிக்கை தாக்கல் செய்ய அனுமதி  அளித்து தமிழர்கள் முதுகில் குத்தி இருக்கிறது.

நினைத்தாலே இதயம் பதறும் கொடுஞ்செயல் இது. டெல்டா விவசாயிகளுக்கு சொட்டு நீரும் கிடையாது என்று சொல்லாமல் சொல்கிறார்கள்.

தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீர் கிடைக்கும்  என்று சொல்வதெல்லாம் வெளி வேடம்.

பெங்களுருக்கு குடிநீர்  , மின் உற்பத்தி இரணடும் தான் நோக்கம் என்று  சொன்னாலும் உள்  நோக்கம் வேறு. பாசன பகுதிகளை விரிவாக்கம் செய்வது கர்நாடகாவில் கிடைக்கும் நீரை எல்லாம் அங்கேயே அணைகளில்  சேகரித்து வைத்துக் கொண்டு  பயன் படுத்தியது போக  மிச்சம் ஏதாவது இருந்தால் கழிவு நீரை வெளியேற்றுவது போல் கொஞ்சம் தருவார்கள்.

காவிரி நீர் நிர்வாக ஆணையம்  மத்திய நீர் வளத்துறை இரண்டிற்கும் மசூத் உசைன் தான் தலைவர்.    அவர் நீர் வளத்துறை சார்பில் அனுமதி அளித்து விட்டு இறுதி அறிக்கையை ஆணையத்தின் தலைவர் என்ற முறையில் அதற்கும் அனுமதி அளிப்பார்.   மத்திய அரசின் ஆணைப்படி இயங்கும் அமைப்புகள் தான் இரண்டும்.  மறுக்க முடியுமா?

காவிரி தீர்ப்பாயத்தின் இறுதி தீர்ப்பை உச்ச நீதிமன்றம் இறுதி செய்து கடந்த  16/02/2018 ல் இறுதி  தீர்ப்பு  வழங்கி விட்டது. அதன் படி தமிழகத்திற்கு ஆண்டிற்கு  177.25  டி எம் சி தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் காவிரி நீர் தொடர்பாக எது செய்தாலும் ஆணையத்தில் தான் அணுகி பெற வேண்டும்.

இன்னிலையில் மேகதாது அணை தொடர்பாக மத்திய நீர் வளத்துறை இப்போது சாத்தியகூறு கூறு அறிக்கையை ஏற்றுக்  கொண்டு திட்ட அறிக்கை அளிக்க அனுமதி அளிக்க வேண்டிய அவசிய அவசரம் என்ன?

உச்சநீதி மன்றதையோ ஆணையத்தையோ அணுகாமல் அணை கட்டுவது தொடர்பாக உத்தரவிட நீர் வளத்துறைக்கு அதிகாரம் உண்டா?

இதெல்லாம் மத்திய அரசுக்கு தெரியாமலா நடக்கிறது.

தமிழ்நாட்டின் அனுமதி  இல்லாமல் அணை  கட்ட முடியாது என்பது உண்மையானால், தமிழ்நாடு முன்பே அனுமதி மறுத்த  நிலையில் அணை கட்ட திட்ட அறிக்கை தயாரிக்க ஏன் உத்தரவிட வேண்டும்.?

அணை கட்ட உரிமை உண்டு என்று நிலை நாட்டிய  பிறகல்லவா  திட்ட அறிக்கை தயாரிப்பதில் அர்த்தம் இருக்கும்.

டெல்டா பகுதி விவசாயிகள் சாகுபடி  செய்ய வழியில்லாமல் நிலங்களை விட்டு ஓட வேண்டும். அந்தப் பகுதிகளை பெட்ரோலிய மண்டலமாக அறிவிக்க வேண்டும்.   தனியாருக்கு தாரை  வார்த்து ஹைட்ரோ கார்பன் உறிஞ்சி எடுத்து நிலங்களை மலடாக்க  வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் திட்டமா?

முன்பே கர்நாடகாவில் 110  டிஎம்சி  தண்ணீர் தேக்குமளவு அணைகள் உள்ளன.   மேகதாதுவும் சேர்ந்துகொண்டால் 170  டிஎம்சி தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.     அது மேட்டூரில்  தேக்கும் நீரை விட இரண்டு மடங்காகும். மேட்டருக்கு நீரே வராதே.

ஏற்கெனெவே உச்ச நீதி  மன்றம் பெங்களுருக்கு குடிநீர் தேவைக்கு  என  இறுதி தீர்ப்பில் 7 டிஎம்சி நீர் ஒதுக்கி  உள்ளது. கர்நாடகா திட்டமிடும் 400  மெகா வாட் மின் உற்பத்திக்கு எவ்வளவு நீர் தேக்கி ஆக வேண்டும்?

நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிற நேரத்தில் கர்நாடகாவில்  வாக்கு வங்கியை  உறுதி படுத்திக் கொள்ள மத்திய அரசு இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது.   தமிழ் நாட்டில் தான் அதற்கு வேலை இல்லையே?

தமிழ் நாட்டில் ஒரு அடிமை ஆட்சி இருக்கிறது . என்ன செய்து விடுவார்கள் என்ற கணிப்பு.

ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் எதிர்க் கட்சிகள் சும்மாவா இருப்பார்கள்!

திமுக தலைவர் ஸ்டாலின் கூட்டியுள்ள சர்வ கட்சி  கூட்டத்தில் இது தொடர்பாக எதாவது செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இருக்கிறது.

உடனடியாக மாநில அரசு உச்சநீதிமன்றதையோ காவிரி ஆணையத்தையோ அணுகி தடை கோர வேண்டும்.

அதையும் மீறி மத்திய அரசு செயல்பட்டால் மக்கள் திரண்டு அறவழிப் போராட்டத்தை துவங்க வேண்டும்.

ஏனென்றால்  எட்டு மாவட்டங்களில் உள்ள டெல்டா விவசாயிகளுக்கு இது வாழ்வா சாவா என்ற வாழ்வாதார பிரச்னை.