வேளாண்மை

விவசாயத்தை ஒழிக்க வந்திருக்கும் ஒப்பந்த சாகுபடி சட்டம்?

Share

தமிழ்நாடு விளைபொருள் மற்றும் கால்நடை ஒப்பந்த சாகுபடி மாற்றும் சேவைகள் (ஊக்குவித்தல் மற்றும் வசதி செய்து கொடுத்தல்) மசோதா (Tamilnadu Agriculgtural Produce and Livestock Contract Farming and Services (Promotion and Facilitation) Bill  இந்தியாவில் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெற்ற முதல் சட்டமாக ஆகி இருக்கிறது.

சென்ற பிப்ரவரி மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இதன்படி 110 விவசாய விளைபொருள்கள் இந்த ஒப்பந்த சாகுபடி முறையில் அடங்கும். பல்வகை தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் மட்டுமல்லாமல் கால்நடை மருந்துகள் உட்பட பல பொருட்கள் இதில் அடங்கும்.

ஒப்பந்த சாகுபடி என்பது சாகுபடிக்கு முந்தைய ஒப்பந்தம். இது விவசாயிகளுக்கும் விளைபொருட்களை வாங்குபவர்களுக்கும் இடையே ஏற்பாடு செய்யப்படும் ஒன்று. அறுவடைக்கு பின்னால் விளைவிப்பவர்களுக்கு சந்தைப்படுத்தலில் ஏற்படும் நிலையில்லாத் தன்மையை ஒட்டி விவசாயிகளுக்கு ஏற்படும் இன்னல்களை துடைக்க இது உதவும் என்பது சொல்லப்படும் காரணம்.

ஆனால் இந்த மசோதா மத்திய அரசு பரிந்துரைத்த மாதிரி மசோதாவை பின்பற்றி கொண்டு வந்தது என்பதுதான் இதில் ஏதோ சூது மறைந்திருக்கிறது என்று சந்தேகிக்க வைக்கிறது.

சாகுபடியாளர்களின் நன்மையைக் கருதி இந்த மசோதா வடிவமைக்கப்பட்டது என்பது உண்மையா?

ஒரு நிரந்தர நிறுவன ஏற்பாடு இரு தரப்புக்கும் நன்மை தரத் தக்கதாய் அமையும் என்றெல்லாம் கூறுகிறார்கள். அது எந்தளவு உண்மை?

விளைச்சலுக்கு பிந்தைய பாதிப்பை ஈடு கட்டத்தான் பயிர் காப்பீடு திட்டம் செயல் படுத்தப்படுகிறது. அந்த திட்டம் தோல்வி அடைந்து விட்டதா?

ஒப்பந்தம் போடுகிறவர்கள் எப்படி இந்த இழப்பை ஈடுகட்டி  கொள்வார்கள்? அவர்களும் அதே காப்பீடு திட்டத்தில் சேர்ந்துதானே இழப்பீடு பெற்று அதை சாகுபடியாளர்களுக்கு தருவார்கள்? தனக்கு எந்த லாபமும் இல்லாமல் எப்படி ஒருவர் இந்த ஒப்பந்தத்துக்கு சம்மதிக்க முடியும்?

அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச விலை என்பது உற்பத்தி செலவை விட லாபம் தரும் விலையாக இருந்தால் சாகுபடியாளருக்கு எந்த இழப்பும் வராது.

லாபம் தரும் விலை நிர்ணயம், சரியான காப்பீடு திட்டம், இடுபொருள் தடையின்றி கிடைக்கச் செய்வது., கொள்முதலில் சுலப ஏற்பாடு இந்த நான்கும் இருந்தால் சாகுபடி சிறக்கும். அதை அரசு இதுவரை சரிவர செய்யாததுதான் விவசாயம் வீழ்ச்சி அடையக் காரணம்.

இந்த ஒப்பந்த ஏற்பாட்டில் விலையை முன்கூட்டியே தீர்மானித்து விடுவார்களாம்.

வாங்குபவர் இந்த ஒப்பந்தத்தில் தீர்மானிப்பவராக இருப்பார். ஆம். வாங்குபவர்தான் என்ன பயிரை சாகுபடி செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்ன உரம் போடவேண்டும், எந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் தீர்மானிப்பார். இதில் எதையாவது சாகுபடியாளர் செய்ய தவறினால் அதன் பாதிப்பு சாகுபடியாளருக்குத்தான்.

இந்த ஒப்பந்தத்தை அரசு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும்.

அரசு இதில் ஏற்படும் ஒப்பந்த மீறல்களை குறித்து தக்க நடவடிக்கை எடுக்க ஒரு அதிகாரம் பெற்ற அமைப்பை உருவாக்கும். அதில் இரு தரப்பையும் பிரதிநிதித்துவ படுத்தும்  10 உறுப்பினர்கள் இருப்பார்கள். வாங்குபவர் தவறு செய்தால் ரூபாய் 15000 அபராதம் சாகுபடியாளருக்கு ரூபாய் 1500 என்றெல்லாம் அம்சங்கள் இருக்கும்.

இதில் மறைந்திருக்கும் உண்மைகள் என்ன?

அரசு இனிமேல் சாகுபடியாளரிடம் இருந்து கொள்முதல் செய்யாது. அரசாங்கம் ஒதுங்கிக் கொண்டு தனியாரிடம் பொறுப்பை கொடுத்து விடும்.

புரியாத புதிர். இந்த மசோதா தமிழ்நாட்டு சட்ட மன்றத்தில் பிப்ரவரி மாதம் 2019ல்  நிறைவேற்றப்பட்டபோது ஏன் விரிவான விவாதம் நடைபெறவில்லை.

சட்ட மன்ற உறுப்பினர்களின் வேலையே அதுதானே?

இந்த சட்டம் 01/01/2020ல் அமுலுக்கு வரும் என்று ககன்தீப் சிங் பேடி கூறுகிறார். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றுவிட்டது. இன்னும் தமிழக அரசு என்று அமுலுக்கு வரும் என்று அறிவிக்கவில்லை.

இந்த சட்டம் விவசாயத்தை ஒழித்துவிடும்?

போதும் விவசாயம் என்று நிலத்தை பெருமுதலாளிகளிடம் விற்று விட்டு நகரத்தை நோக்கி சிறு குறு விவசாயிகளை ஓட வைக்க மட்டும்தான் இந்த சட்டம் பயன்படும்.

அதுதானே அவர்களின் நோக்கம்.?

மசோதா நிலையிலேயே கடும் எதிர்ப்புக்கு உள்ளாக வேண்டிய மசோதா சட்டமாக வந்தபின் எழும் எதிர்ப்புகளை பொருட்படுத்தவா போகிறது?

மத்திய பாஜக திட்டமிடும் செயல்களை உண்மையாக நிறைவேற்றி வரும் விசுவாசமான கூட்டாளி அதிமுக அரசு?

ஆனால் எத்தனைதான் திட்டமிட்டாலும் உண்மையின் தாக்கம் விவசாயிகளை பாதிக்கும் போது அவர்கள் விட்டு விடுவார்களா?

This website uses cookies.