மகாராஷ்ட்ராவில் மட்டும் கடந்த மூன்று ஆண்டுகளில் 12000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மறுவாழ்வுத் துறை அமைச்சர் தேஷ்முக் எழுத்து மூலமான் பதிலில் தெரிவித்தார்.
32 ஆண்டுகளுக்கு முன் 1986 ல் சாஹேப்ராவ் கார்பே தன் குடும்பத்துடன் தொடங்கி வைத்த தற்கொலை இன்னும் முடியவில்லை. ‘விவசாயம் செய்து வாழமுடியாது ‘ என்பது அவர் எழுதி வைத்த தற்கொலை குறிப்பு.
2011ல் மட்டும் நாட்டில் நடந்த தற்கொலைகள் 1,35,585. அதில் விவசாயிகள் மட்டும் 14207 பேர். இதே விகிதம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்கிறது.
2017-ல் மகாராஷ்டிரா அரசு 34000 கோடி விவசாய கடன் தள்ளுபடி அறிவித்தது. அதேபோல் பல அரசுகளும் கடன் தள்ளுபடி செய்திருக்கின்றன.
கடன் தள்ளுபடி விவசாயிகள் தற்கொலை பிரச்னையை தீர்க்குமா?
இந்த ஆண்டு கூட மகாராஷ்டிரா அரசு 19000 கோடி கடன் தள்ளுபடி அறிவித்தும் கூட ஜனவரி முதல் மார்ச் வரை 610 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரை செய்தது விவசாய விளைபொருளுக்கு குறைந்த பட்ச கொள்முதல் விலை (Minimum support price). அதுவே அயோக்கியத்தனம் அல்லவா?
குறைந்துபட்ச லாபகர விலை மட்டுமாவது கொடுக்கலாம் அல்லவா?
கடன் தள்ளுபடியை வங்கிகள் ஒப்புக்கொள்ளாமல் இருக்கும் கதைகளும் இருக்கின்றன.
விளைபொருட்களை குளிர் சாதன கிட்டங்கிகளில் வைக்கும் வசதி இல்லாமை, கொள்முதல் பிரச்னைகள், லாபகர விலை கிடைக்காமல் நட்டத்துக்கு விற்கும் அவலம், இயற்கை காரணங்களால் பயிர்கள் விளைச்சல் இல்லாமல் போவது போன்ற பல காரணங்கள் விவசாயிகளை வாட்டி வருகிறது.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து அளவில் பயிர் காப்பீடு திட்டம் அமுல்படுத்துவது மிகவும் முக்கியம். அதை அமுல்படுத்துவதில் முறைகேடுகள் நடவாது பார்த்துகொள்வதில் கவனம் தேவை.
அதுவும் லாபகரமான விலை நிர்ணயம் மிகவும் முக்கியம். உயர்த்தினால் இப்போதைய விலை இரட்டிப்பாகும். அதாவது பொதுமக்கள் அரிசி கோதுமை போன்ற அனைத்து விளைபொருட்களும் விலை ஏறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டும். அரசு வேண்டுமானால் முடிந்த மட்டும் மானியம் தரட்டுமே?!
இந்த இரண்டும் உறுதி செய்யப்பட்டால் விவசாயிகள் தற்கொலைகள் தடுக்கப்படும் .
இல்லை என்றால் விவசாயத்தை விட்டு ஓடும நிலைதான் தொடரும்.