தெலுங்கானாவில் இருக்கும் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு சாகுபடி காலத்துக்கு ஏக்கருக்கு ரூபாய் 4000 வீதம் இரண்டு சாகுபடி காலத்துக்கு ரூபாய் 8000 அவரது வங்கிக் கணக்கில் அரசு செலுத்தி விடும். அரசுக்கு இதனால் ஆண்டுக்கு ஆகும் செலவு ரூபாய் 10000 .
அவர் சாகுபடி செய்கிறாரா இல்லையா என்பதெல்லாம் பிரச்னை இல்லை.
இந்தியாவிலேயே இதுவே வெற்றி பெற்ற முதன் முயற்சி. எல்லா விவசாயிகளும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். குறைந்த பட்ச உத்தரவாதம் இருக்கிறதே.
அதனால் தான் காங்கிரஸ், தெலுகு தேசம் ஜனசமிதி கம்யுனிஸ்டு கூட்டணியை முறியடித்து 119 சட்டமன்ற இடங்களில் 88 இடங்களை தனியாகவே பெற்று ஆட்சியில் அமர்ந்தார் கே.சந்திரசேகர ராவ்.
இந்த திட்டத்தை அமுல் படுத்த முதல் தேவை நில ஆவணங்கள் அனைத்தும் கணினி மயப்படுத்தப்பட்டன. அறுபது ஆண்டுகளுக்கு பிறகு நில ஆவணங்களை ஆய்வு செய்து நவீனப் படுத்த பெரு முயற்சி தேவைப்பட்டது. அதை தெலுங்கானா வருவாய் துறை செம்மையாக செய்தது.
57 லட்சம் விவசாயிகளின் நிலங்களை கணினி மயமாக ஆவணப்படுத்துவது என்பது சாதாரண காரியமா? அப்படி கணினி மயமாக்கப் பட்டால் மட்டுமே இது போன்ற திட்டங்களை அமுல்படுத்த முடியும்.
2000 ஹெக்டேருக்கு ஒரு விவசாய விரிவாக்க அதிகாரி. அவருக்கு தேவைப்படும் கணினி இன்டர்நெட் வசதிகள் தரப்பட்டன. இந்த அடிப்படை வேலைகள் செய்ததால் திட்டம் அமுலுக்கு வருவது சாத்தியப்பட்டது.
விதை, உரம், பூச்சிகொல்லி மாநியங்கள் தருவதற்கு பதில் இதுபோல் நேரடி நிதி உதவி அளித்தால் விவசாயி என்ன சாகுபடி செய்வது என்பதில் மாற்றி தேர்வு செய்ய வாய்ப்பு அதிகரிக்கும்.
உலக வர்த்தக அமைப்பும் விவசாயிகளுக்கு நேரடி நிதி தருவதையே ஆதரிக்கிறது.
திட்டமிடலில் இருக்கிறது எல்லாம். இங்கே என்ன நடக்கிறது.? எந்த திட்டம் அறிவித்தாலும் அதில் அரசியல் தலையீடு செய்து கட்சிக்காரர்களுக்கே பயன்படுமாறு செய்வது மற்ற கட்சிக்காரர்களையும் பொதுமக்களையும் எதிரிகள் ஆக்காதா?
விவசாயத் தொழிலாளிகள் குறைந்து வருகின்றனர். அவர்களுக்கும் குறைந்த பட்ச ஆதரவு உதவித்துகையை அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்தி கூலி உயர்வை நேரடி கண்காணிப்பில் அரசு வைத்திருந்து சாகுபடி செலவுகளை கட்டுப்படுத்தி வைத்தால் மட்டுமே எதிர்பார்க்கும் நன்மைகள் விளையும்.
எந்த பயிர் சாகுபடி செய்வது என்பது தொடங்கி கட்டுபடியாகும் விலை நிர்ணயம் விளைபோருளை சந்தைப் படுத்துவது வரை அரசு கண்காணிக்க வேண்டும். அதற்கான அமைப்புகள் இப்போதும் இருக்கின்றன. அவை முறையாகவும் வலிமையாகவும் இயங்குகின்றனவா? அதைப்பற்றி ஆய்வுகள் உண்டா? ஏட்டில் இருந்தால் மட்டும் போதாது. நடைமுறைக்கு வரவேண்டும்.
எந்த திட்டத்திலும் குறைகளே இல்லாமல் நடைமுறைபடுத்த முடியாது. கே.சி.ஆர் திட்டத்திலும் நேரடி குத்தகை சாகுபடி தார்களுக்கு பயன் இல்லாமல் வெளியூர்களில் இருக்கும் உடைமையாளர்களுக்கு பயன் தருவது எப்படி என்று குற்றம் சுமத்தி வழக்கு நடக்கிறது. அனுபவத்தின் அடிப்படையில் திட்டத்தில் மாற்றம் செய்து கொள்ளலாமே. நம்மிடம் திட்டமே இல்லையே.
எல்லா மாநிலங்களும் பின்பற்ற தக்க ஒரு திட்டத்தை அமுல் படுத்தியிருக்கும் சந்திரசேகர ராவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
This website uses cookies.