நெல் கொள்முதலில் தொடர்கிறது கொள்ளை?!

nel

அமைச்சர் காமராஜ் கொள்முதல் நிலையங்களில் புகார்கள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கிறார். யார் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை மட்டும் இருக்காது.

40  கிலோ கொண்ட மூட்டை ஒன்றுக்கு ரூபாய் 30 வீதம் கொடுத்தால்தான் கொள்முதல் ஆகும்.    மறுத்தால் வரிசையில் நிற்கும் மூட்டை குவியல்கள் எல்லாம் எடுத்தபின்தான் உங்கள் வரிசை வரும். அப்போதும் கலப்பு மண் குப்பை கலப்பு ஈரப்பதம் என்று ஏதாவது காரணங்களை சொல்லி பிடித்தம்  செய்து விடுவார்கள். திரும்ப எடுத்துக் கொண்டு போகவும் முடியாது. எங்கே கொண்டு போவது.?  வீட்டில் வைக்கவும் முடியாது. கொடுக்க வேண்டியதை கொடுத்து வெளியே வந்தால் போதும் என்ற நிலையில் தான் விவசாயிகள் இருக்கிறார்கள்.

பணமாக கொடுத்தால் லஞ்சம் கேட்பார்கள் என்றுதான் விவசாயிகள் கணக்கில்  வங்கியில் செலுத்தும் முறையை கொண்டு  வந்தார்கள்.  இப்போது லஞ்சம் முன்பாகவே கொடுக்க வேண்டியிருக்கிறது.

சென்ற ஆண்டு 19  லட்சம் டன் கொள்முதல்  செய்த  தமிழக அரசு  இந்தாண்டு   25  லட்சம் டன்  என்று இலக்கு நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.  40 கிலோ மூட்டைக்கு  ரூபாய் 35 லஞ்சம் என்றால்   20  லட்சம் டன்னுக்கு எவ்வளவு என்று கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். எல்லாம் மேலிருந்து கீழ் வரை பகிரப் படுகிறது என்கிறார்கள்.  பட்டப் பகலில் நடக்கும் கொள்ளை இது. யாராலும் தடுக்க முடிய வில்லை.

விவசாயிகளுக்கு ஆயிரம் கட்டுப்பாடுகள் விதிக்கும் அதிகாரிகள் வியாபாரிகள் எங்கிருந்தோ கொண்டு வரும் நெல்லை மட்டும் அதிக கமிஷனுக்கு எடுத்துக் கொள்ளும் அவலமும் தொடர்கிறது.

விவசாயத்தின் எல்லா கூறுகளுக்கும் தனி அமைச்சகம் அமைத்து  நேரடியாக கண்காணித்தால் மட்டுமே இந்த கொடுமையை தடுக்க முடியும்.

விதை விநியோகம் , நீர் மேலாண்மை, உர விநியோகம்,  டிராக்டர் அறுவடை யந்திரம் முதலான  விவசாய கருவிகள் தேவை,  சந்தைப் படுத்தல், நியாய விலை எல்லாவற்றிலும் ஊழல் என்றால் எந்த விவசாயி பிழைக்க முடியும்?

முதலில் இந்த கொள்முதல் கொள்ளையை தடுக்கட்டும்.