டெல்லியைக் குலுக்கிய விவசாயிகள் பேரணியை கண்டுகொள்ளாத மோடி அரசு?!

kisan-rally
kisan-rally

207 விவசாய சங்கங்களை சேர்ந்த அகில இந்தியாவிலும் இருந்து லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் பேரணி நடத்தினர்.

அகில இந்திய கிசான் சங்கர்ஷ் என்று ஒரு ஒருங்கிணைப்புக் குழு உருவாகப் பட்டுள்ளது.

பாஜக அரசு கண்டுகொள்ளவே இல்லை.

தென் இந்தியாவில் இருந்து அய்யாகண்ணு தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மண்டை ஓடு மட்டும் எலும்புகளுடன் ஊர்வலம் சென்றனர். எப்போதும் வித்தியாசமாக போராட்டம் நடத்தும் அய்யாக்கண்ணு இப்போதும் அதேபோல் போராட்டம் நடத்தி இருக்கிறார்.

அதை நம்மூர் பொன். ராதாகிருஷ்ணன் தமிழர்களுக்கே அவமானம் என்று வர்ணித்திருப்பது அவருக்குத்தான் அவமானம். இப்படி விமர்சிப்பதை விட்டு மத்திய அமைச்சர்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை சந்திக்க ஏற்பாடு செய்திருக்கலாம்.

அயோத்தி வேண்டாம் விவசாயி வேண்டும் என்றும் கடன் இல்லாத விவசாயி தற்கொலை இல்லாத இந்தியா என்றும் முழங்கி தாங்கள் மதத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நிரூபித்திருக்கிரார்கள்.

” விவசாய விளைபொருளுக்கு கட்டுபடியாகக் கூடிய லாபகர விலை

அதுவரை கடன் நிவாரணம் ”

இந்த இரண்டு மட்டும் விவசாயிகள் கோரிக்கைகளின் அடித்தளம்.

இந்த இரண்டிற்குள் எல்லாம் அடங்கி விடும்.

நிதி ஆதாரம், விதை முதல் உரம் வரை தட்டுப்பாடில்லா விநியோகம், தடையில்லா மின்சாரம், தேவைக்கேற்ப தேவையான நீர் ஆதாரம் உறுதி படுத்தல், சந்தைப் படுத்தலில் சுலபமான வழிமுறைகள் இவையே அரசு தர வேண்டிய உதவிகள்.

ஆனால் விவசாயிகளை இரண்டாம் தர குடிமக்களாகவே எல்லா அரசுகளும் கருதி நடத்திவந்திருக்கின்றன .

தெலங்கானா, மகாராஷ்டிரா, கர்நாடக அரசுகள் மூலதனத்தில் மானியம், மின்மய சந்தை, வணிகர் கூட்டணிகளை தகர்த்தல் போன்ற பிரச்னைகளில் பல விதமாக முயன்று வருகின்றன. ஆனால் தேசிய அளவில் ஒன்றிணைந்த முயற்சிகள் இல்லை.

பேரணியில் வந்தவர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து பேச இருக்கிறார்கள்.   ஆளும் கட்சி பேசுமா?

அரசு அழைத்துப் பேசியிருக்கலாம். பிரதமர் மோடி குறைந்த பட்ச ஆதார விலை விவசாயிகளுக்கு கிடைக்கும் என மேடை தோறும் முழங்கி வருகிறார். ஆனால் நடைமுறை படுத்தல் என்று வரும்போது கண் துடைப்பாக சிறிதளவு விலையை  உயர்த்தி கொடுத்துவிட்டோம் என்று தம்பட்டம் அடிப்பதுதான் வாடிக்கையாக இருக்கிறது.

மோடியின் பேச்சுக்கள் மட்டுமே வாக்குகளை பெற உதவாது.

கொஞ்சமாவது விவசாயிகளின் பிரச்னைகளையும் தீர்த்தால் தான்

மக்கள் உங்களை நம்புவார்கள்.