கரும்பு விவசாயிகளை மோசடி செய்ய உதவிய வங்கி நிர்வாகிகளுக்கு என்ன தண்டனை??!!

sugar-cane-farmer
sugar-cane-farmer

தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடி  ஆரூரான் சர்க்கரை ஆலையும் கோட்டூர் அம்பிகா சர்க்கரை ஆலையும் ஒரே நிர்வாகத்தின் கீழ் உள்ளவை. அவற்றின் அதிபர் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக சர்க்கரை ஆலை தொழிலில் உள்ளவர்.

அகில இந்திய சர்க்கரை ஆலை நிர்வாகிகள் சங்க தலைவராக இருந்தவராம் ராம.தியாகராஜன் .

கரும்பு விவசாயிகளுக்கு முன்னூறு கோடி ரூபாய் அளவுக்கு நிலுவை வைத்து உள்ளாராம். அதை அடைக்க அவர் கையாண்ட விதம்தான் சர்ச்சைக்கு உரியது.

விவசாயிகளுக்கு, அவர்களிடம் இருந்து கொள்முதல் செய்த கரும்புக்கு ஆன விலையை, ஆலை நிர்வாகம்தான் கொடுக்க வேண்டும். அதை நிலுவையில் வைக்க எந்த நிர்வாகத்துக்கும்  உரிமை கிடையாது.

விவசாயிகளுக்கு உரிய பணத்தை கையாடல் செய்தால் தவிர பாக்கி வைக்க  வாய்ப்புகளே இல்லை.

ஏறத்தாழ 1500 விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கி துகையை அவர்கள் பெயரில்  பல வங்கிகளில் கடன் வாங்கி கொடுத்து எப்படி நிர்வாகத்தால் தப்பிக்க முடியும்?

விவசாயிகள் வாங்கிய கடனை நான் அடைத்து விடுகிறேன் என்று ஆலை நிர்வாகம் ஒப்புக் கொண்டுவிட்டு பின்னர் அந்த உத்தரவாதத்தை காப்பற்ற முடியாமல் போனால் அந்த கடனை விவசாயிகள்தானே செலுத்த வேண்டும்.?

இந்த மோசடி வங்கிகளின் ஒத்துழைப்பு  இல்லாமல் நடந்திருக்க முடியுமா?

ஒன்று மட்டும் தெளிவு. விவசாயிகள் நேரடியாக வங்கிகளிடம் இருந்து கடன் பெற வில்லை. ஆலை நிர்வாகம்தான் இடையில் இருந்து ஏற்பாடு செய்து கடன் பெற்று தந்திருக்கிறது. அந்த கடனுக்கு ஆலை நிர்வாகம் உத்தரவாதம் தந்திருந்தால் ஆலையின் சொத்துக்களை வசப் படுத்த முடியுமே? ஏன் செய்யவில்லை?

ஏன் விவசாயிகளிடம் அறிவிப்பு கொடுத்து அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்க முயற்சிக்க வேண்டும்.

தான் தரவேண்டிய கடனை வங்கிகளை கொடுக்க செய்து தற்காலிகமாக தப்பித்த அதிபர் இறுதியில் மாட்டிக் கொண்டிருக்கிறார்.

ஆலை அதிபர் கைது செய்யப் பட்டிருக்கிறார். 

                 எந்த நடவடிக்கை ஆனாலும் விவசாயிகள் பாதிக்கப்படாமல் காப்பற்ற வேண்டியது அரசின் கடமை.