வேளாண்மை

8 வழிச்சாலை; உறுதிமொழியை மீறி உச்ச நீதிமன்றம் சென்ற எடப்பாடி??!!

Share

சென்னை – சேலம் எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை கொடுத்த பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு போக மாட்டோம் என்று பேட்டி கொடுத்தார்.

தேர்தல் நேரத்தில் நிதின் கட்கரி சேலத்தில் பரப்புரை கூட்டத்தில் பேசும்போது விவசாயிகளிடம் ஒப்புதல் பெற்று சேலம் சென்னை எட்டு வழி சாலை திட்டம் நிறைவேற்றப்படும் என்று பேசினார். மேடையில் இருந்த பாமக நிறுவனர் மருத்துவர்  ராமதாசோ முதல்வர் எடப்பாடியோ அதை எதிர்த்து குரல் எதுவும் எழுப்பாமல் மெளனமாக இருந்தனர்.

தமிழ்நாட்டில் தேர்தல் தோல்விக்குப் பிறகு இவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்று கட்கரி தீர்மானித்துவிட்டார் போல தெரிகிறது.

திடீர் என்று தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்து அது  வருகிற மூன்றாம் தேதி விசாரணைக்கு வருகிறது.

அன்புமணியும் தனது பங்கிற்கு ஒரு கேவியட்டை போட்டு வைத்திருக்கிறார்.

உச்ச நீதிமன்றம் என்ன செய்யும் என்பது வேறு. ஆனால் அதற்குள் விவசாயிகள் திரண்டு போராட தயாராகி விட்டனர்.

இந்த போராட்டம் உருவாக எடப்பாடியே காரணம்.

ஏற்கெனெவே மூன்று சாலைகள் சேலம் -சென்னை இடையே இருக்கும்போது எதற்கு நான்காவதாக ஒரு சாலை என்ற கேள்விக்கு இதுவரை ஏற்றுக் கொள்ளத்தக்க எந்த விளக்கத்தையும் எடப்பாடி அரசு சொல்ல வில்லை. இதை முன்னெடுக்கும் மத்திய  அரசும் சொல்ல வில்லை. பெரு நிறுவனங்கள் நன்மைக்காக என்று ஒப்புக்கொள்ள தயங்குகிறார்கள்.

2020 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்பது எத்தனை குடும்பங்களை  அழிக்கும் என்பது எடப்பாடிக்கு தெரியாதா?

சட்ட வரைமுறை பின்பற்றபட வில்லை என்றால் இப்போது பின்பற்றுகிறோம் என்பார்கள்.

ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு மத்திய அரசின் திட்டங்களுக்கு எதிராக போராடுவதாக பாமக சொல்வது ஏற்றுக் கொள்கிற வகையில் இல்லை.

இரண்டு மாதத்தில் ராஜ்ய சபா உறுப்பினராக அதிமுகவினால் தேர்வு செய்யப்பட வேண்டும் ஒப்பந்தப்படி. அதற்கு பாஜக சம்மதிக்க வேண்டும். எங்களுக்கு குடைச்சல் கொடுக்கும் கட்சிக்கு எதற்கு இடம் என்று பாஜக ஆட்சேபித்தால் அதை அதிமுக நிராகரிக்க முடியுமா?

கூட்டணியை விட்டு வெளியே வரும் தைரியம் பாமகவுக்கு வருமா?

மக்களை போராட்டத்திற்கு தூண்டும் எடப்பாடி தனது போக்கை மாற்றிக் கொண்டு இந்த வேண்டாத திட்டத்திற்கு மூடு விழா காண்பதே நல்லது. உட்கட்சி சண்டையால்  அதிமுகவில் ஒருவருக்கு கிடைக்க இருந்த மத்திய அமைச்சர் பதவியை இழந்த எடப்பாடி மீண்டும் அதை பெற முயற்சி செய்வாரா என்பதே சந்தேகம்.

மத்திய அரசு மேலும் இதில் பிடிவாதம் காட்டுமே ஆனால் மக்களின் எதிர்ப்பை பல வகைகளில் சந்திக்க நேரிடும்.

                  எல்லாம் சரி. கட்கரி என்ன சொன்னார். விவசாயிகளின் ஒப்புதலை பெற்றுத்தானே நிறைவேற்றுவோம் என்றார். விவசாயிகளின் ஒப்புதலை பெற  ஒரு கூட்டம் நடத்தி அதை பெரும் முன் இந்த மேன்முறையீடு? 

This website uses cookies.