காலதாமதம் ஆனாலும் ஒரு வழியாக காவிரி ஆணைய கூட்டம் நடந்தது டெல்லியில்.
தீர்ப்பின் படி பெங்களூரில் ஒழுங்காற்றுக் குழுத் கூட்டம் நடந்து அங்கு மாநிலத்தில் உள்ள அணைகளின் தண்ணீர் இருப்பு நிலவரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு அந்த புள்ளி விபரங்களுடன் தான் காவிரி ஆணைய கூட்டம் நடத்தப் பட்டிக்க வேண்டும்.
ஏனென்றால் ஒவ்வொரு முறையும் தண்ணீர் விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட போதெல்லம் தண்ணீர் இருப்பு இல்லை என்று கூறி தண்ணீர் விட மறுத்தது கர்நாடகம்.
நீதிமன்ற நடவடிக்கைகளை கேலிக்கூத்தாக்கும் வேலையை கர்நாடகம் செய்து வந்தது. இப்போதும் அதே வேலையை செய்யக் கூடாதல்லவா?
மேகதாது அணை தொடர்பாக தனது ஆட்சேபணையை தமிழகம் தெரிவித்த பிறகும் எதற்காக கூட்ட நிரலில் அது இடம் பெற்றது?
ஆய்வு செய்து திட்ட அறிக்கை அளிக்க அனுமதி அளித்த சுற்று சூழல் அமைச்சரகம் தனது எல்லையை மீறி செயல்பட்டது.
இந்த கூட்டத்தில் அது விவாதிக்க படவில்லை என்றாலும் எதிர்காலத்தில் அது மீண்டும் எடுக்கப்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
தண்ணீர் திறக்க உத்தரவிட்ட ஆணைய தலைவர் மசூத் உசைன் இந்த முடிவு கர்நாடக அரசின் ஒப்புதலோடு வெளியிடப்படுவதாக கூறினார்.
ஆனால் கர்நாடக சிறிய நீர்ப்பாசன அமைச்சர் புட்டராஜு கர்நாடக அணைகளுக்கு நீர் வந்தால் தமிழகத்திற்கு நீர் திறப்போம் என்று பேட்டி கொடுக்கிறார். அதுவும் ஆணையம் நீர் திறக்க உத்தரவிட்டு இருப்பது சரியல்ல என்றும் கூறுகிறார்.
நீர்ப்பாசன அமைச்சர் டிகே சிவகுமார் பாஜக அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த பிரச்னையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்கிறார்.
ஆணையத்தின் உத்தரவை மதிக்கும் வகையில் கர்நாடக அமைச்சர்களின் பேச்சுகள் இல்லை.
ஏற்கெனெவே சேலத்தில் குடிநீர் பஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. மேட்டூர் அணையை பெரிதும் நம்பியிருக்கும் சேலம் மக்கள் கர்நாடக அரசின் போக்கால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
அணை இருப்பு விபரம் தெளிவாகவும் ஒளிவு மறைவு இல்லாமலும் இருந்தால் பிரச்னை பெரிது ஆகாது. அணைகளுக்கு வர வேண்டிய தண்ணீரை கர்நாடகம் ஏரி குளங்களிலும் தடுப்பணை கட்டியும் சேமித்து வைத்து விட்டு அணைகளில் தண்ணீர் இல்லை என்று நாடகம் ஆட அனுமதிக்க முடியாது.
தீர்ப்பின் படி தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீர் கடந்த மாதங்களில் வரவில்லை என்பதை ஏன் தமிழக அரசு ஆணைய கூட்டத்தில் வலியுறுத்தவில்லை?
தீர்ப்பு வந்தால் மட்டும் போதாது. அது உண்மையாகவே அமுல்படுத்தப்படவும் வேண்டும்.