நீட் நுழைவுத் தேர்வு நடத்துவதில் அதிமுகவுக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லிக்கொண்டே பாஜக அரசு எடுக்கும் நீட் ஆதரவு நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளித்துக் கொண்டிருந்தது அதிமுக அரசு.
இதற்கு உதாரணம் மத்திய அரசு 2018ல் மசோதாவாக தாக்கல் செய்து 2019ல் சட்டமாக ஆக்கிய மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தம். அதாவது மருத்துவ படிப்புக்கு நீட் தேர்வு ஒன்றே வழி என்றும் இதர வழிகள் அடைக்கப்பட்டு விட்டன என்றும் இந்த திருத்தம் சொல்கிறது.
இந்த சட்டம் நிறைவேற ஆதரவளித்தது அதிமுக. இப்போது இந்த சட்டம் அரசியல் சாசனப் படி செல்லாது என்று வழக்குப் போட்டிருக்கிறது அதிமுக அரசு. இந்த இரட்டை வேடத்திற்கு அதிமுக எந்த விளக்கமும் சொல்லவில்லை.
நீட் நுழைவுத் தேர்வை நடத்துவதில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கேட்டு இரண்டு சட்ட மசோதாக்களை நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி விட்டு மூன்று ஆண்டுகள் அது என்னாயிற்று என்று கூட கேட்க துணிவில்லை இவர்களுக்கு. உயர்நீதி மன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு அப்போதுதான் முதல் முறையாக நாங்கள் அந்த மசோதாவை அப்போதே நிராகரித்து விட்டோமே என்று தகவல் தெரிவித்தது. அந்த லட்சணத்தில் தான் இவர்களுக்கும் மத்திய அரசுக்கும் உறவு இருக்கிறது.
இப்போது இந்த வழக்கினால் என்ன ஆகப்போகிறது?
முன்பே உச்சநீதிமன்றமே நீட் செல்லாது என்ற தன் தீர்ப்பை தானே வாபஸ் வாங்கிக் கொண்டு இன்னும் என்னதான் தீர்ப்பு என்று சொல்லாமல் இருக்கிறது. இடையில் ஏன் நீட் தேர்வு நடக்க வேண்டும் என்ற கேள்விக்கு யாருக்கும் பதில் தெரியவில்லை.
பாடத் திட்டத்தில் தான் கேள்விகள் கேட்கப்பட்டு மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற வரைமுறைக்கு மாறாக பாடத் திட்டம் ஒன்று நீட் பாடத் திட்டம் வேறு என்று இவர்களாகவே முடிவு செய்து கொண்டு அதற்கென பயிற்சி வகுப்புகள் நடத்தவும் அதில் கோடிக்கணக்கில் தனியார் கொள்ளையடிக்கவும் அனுமதிக்கும அநியாயம் வேறெங்கு நடக்கும். ?
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கெடு முடிய இரண்டு நாள் இருக்கும்போது இவர்கள் இந்த வழக்கை போடுகிறார்கள். சட்டம் நிறைவேறி ஆறு மாதம் காத்திருந்தது ஏன்?
உச்சநீதிமன்றம், மத்திய அரசு மாநில அரசு எல்லாம் சேர்ந்து கொண்டு கிராமப்புற, பிற்பட்ட தாழ்த்தப்பட்ட மாணவர்களின் மருத்துவ கனவுகளை பொசுக்கிப் கொண்டிருக்கிறார்கள்.