நீட் தேர்வு மையத்தில் காட்டப்படும் கடுமையான கட்டுப்பாடுகள் மோசடிகளை தடுக்க முடியாதவைகள் என்று நிரூபணம் ஆகியிருக்கிறது.
தமிழகத்தை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் நீட் தேர்வை மும்பையில் எழுதியிருக்கிறார். அங்கு வேறு ஒருவரை அவர் சார்பில் தேர்வு எழுத வைத்து வெற்றி பெற்று தேனியில் மருத்துவக் கல்லூரியிலும் சேர்ந்து விட்டார்.
கல்லூரி முதல்வருக்கு வந்த ஒரு மின் புகார் உதித் சூர்யா நீட் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர் ஒருவர். இப்போது படிப்பவர் வேறு ஒருவர் என்று புகார் சொல்கிறது. விசாரணை ஆரம்பம் ஆகிறது.
உதித் சூர்யா மன உளைச்சல் காரணமாக கல்லூரியில் இருந்து விலகிக் கொள்வதாக கடிதம் அனுப்பி விட்டு தலைமறைவாகிறார். அவரது தந்தை ஒரு மருத்துவர். ஸ்டான்லி மருத்துவ மனையில் பணி புரிகிறார். அவர் தன் மகன் தான் மும்பையில் தேர்வு எழுதியதாகும். தேர்வுச் சீட்டில் அவரது புகைபடத்தை யாரோ மாற்றி விட்டதாகவும் சொல்கிறார். ஆனால் அவரும் அவரது குடும்பமும் விசாரணைக்கு அகப்படாமல் தலைமறைவாகிவிட்டனர்.
எப்படியும் விசாரணையில் உண்மை வெளிவரத்தான் போகிறது.
ஆரம்ப கட்ட செய்திகள் ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதியவர்தான் கேட்ட தொகை கிடைக்காமல் தன்னை பயன்படுத்தியவர்களை காட்டிக் கொடுத்து விட்டார் என்று தெரிகிறது.
வழக்கு ஒரு உண்மையை தெளிவுபடுத்திவிட்டது. நீட் ஒன்றும் நியாயமான தேர்வு இல்லை என்பதே அது.
ஏதோ ஒரு மாணவர் செய்த தவறு முழு தேர்வையும் எப்படி தவறானதாக்கும் என்ற கேள்வி எழும். இன்னும் உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பை சொல்லாத போது எப்படி நீட் நடத்துகிறீர்கள் என்ற கேள்வியில் நியாயம் இல்லையா?
ஏமாற்றுக் காரர்கள் மருத்துவம் சேர எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறார்கள்.
ஏமாறுவதும் தற்கொலை செய்து கொள்வதும் அனிதாக்கள் தான்.