என்ன எதிர்ப்பு வந்தாலும் சமஸ்க்ரிதத்தை திணித்தே தீருவது என்று மத்திய பாஜக அரசு கங்கணம் கட்டி வேலை செய்து வருகிறது.
இப்போது பிரச்னை வெடித்திருப்பது அண்ணா பல்கலைக் கழகத்தில். மூன்றாமாண்டு பி டெக் மாணவர்கள் மூன்றாவது செமஸ்டரில் பகவத் கீதையை ஒரு பாடமாக படித்து தேர்வு எழுதுவதை கட்டாயமாக்கி வெளியிட்ட அறிவிப்புதான் பிரச்சனை ஆகியிருக்கிறது.
திமுக தலைவர் ஸ்டாலின் கண்டித்து அறிக்கை வெளியிட்டபின் துணை வேந்தர் சூரப்பா தலையிட்டு கட்டாயம் என்பது நீக்கப்படுகிறது என்றும் மாணவர்கள் கொடுக்கப்பட்டிருக்கிற 12 பாடங்களில் தாங்களாகவே மூன்றை தேர்ந்தெடுத்து எழுதலாம் என்று தெளிவுபடுத்தி இருக்கிறார்.
அவரது தெளிவில்தான் பல தகவல்கள் தெரிய வருகின்றன.
இந்த திணிப்பு என்பது அகில இந்திய தொழில் நுட்ப கல்வி இயக்ககம் (AICTE) தனது விதிமுறைகளில் இந்த திணிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள்தான் சமஸ்கிருதத்தை 32 பாடங்களில் ஒன்றாக திணிக்கிறார்கள். தொழில் நுட்ப படிப்புக்கும் சமஸ்கிரிததுக்கும் என்ன தொடர்பு என்பதை அவர்கள் விளக்கவில்லை.
அந்த 32 பாடத்திட்டத்தில் 12 பாடத்திட்டத்தை அண்ணா பல்கலை தேர்ந்தெடுக்கிறது. நாங்கள் சமஸ்கிரிததை தேர்ந்தெடுக்க வில்லை என்கிறார் சூரப்பா. எனவே நாங்கள் சமஸ்கிருதத்தை திணிக்கவில்லை என்கிறார்.
ஏ ஐ சி டி இ தொகுத்த பாடங்களில் கீதை, உபநிஷத்துகள், பிளேட்டோவின் தத்துவங்கள், கிரேக்க தத்துவங்கள், என்று பட்டியல் நீளுகிறது. ஆனால் இவை தொழில்நுட்ப படிப்புக்கு எப்படி உதவும் என்பதுதான் கேள்வி.
பகவத் கீதையை படிப்பதால் ஒருவனின் பர்சனாலிடி வளர்கிறது என்றும் வாழ்வின் இலக்கை சாதிக்க வேண்டும் என்ற சக்தி பிறக்கும் என்றும் காரணம் சொல்கிறார்கள்.
அகில இந்திய அமைப்பு பரிந்துரைத்திருந்தாலும் அவற்றை ஏற்றுக் கொள்வது அந்தந்த பல்கலைக் கழகங்களின் தனியுரிமை. எனவே அப்படியே அவற்றை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை என்கிறார் முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி.
சூரப்பா நியமனத்தின் காரணம் புரிந்து விட்டது.
This website uses cookies.