பொதுமேடையில் மாணவர்கள் மத்தியில் நிலவும் சாதிக் கயிறு ஒழிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை பற்றி முன்பு எழுதியிருந்தோம்.
அதை முன்பு அமைச்சர் செங்கோட்டையனும் ஆட்சேபித்து ஏதும் சொல்லவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் மாணவர்களுக்கு இடையே சாதி வேற்றுமையை தடுக்கவே கயிறு கட்ட தடை விதிப்பு என்று பேட்டி கொடுத்தார்.
இடையில் பாஜகவின் எச் ராஜா தனது ட்விட்டரில் மாணவர்கள் கையில் கயிறு கட்டுவது மத நம்பிக்கை. அதில் அரசு தலையிட கூடாது என்று சொல்லியிருந்தார். உடனே அமைச்சர் செங்கோட்டையன் அந்தர் பல்டி அடித்து அப்படி ஒரு வழக்கமே தமிழகத்தில் இல்லை என்றும் அப்படி சுற்றரிக்கை அனுப்பி இருந்தால் அது திரும்ப பெறப்படும் என்று தெரிவித்தார். அது மட்டுமல்ல அந்த சுற்றறிக்கை தனது ஒப்புதல் இல்லாமல் அனுப்பப்பட்டது என்றும் பள்ளிக் கல்வி இயக்குனரை குற்றம் சுமத்தி இருக்கிறார்.
இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கை பயிற்சி ஐ ஏ எஸ் அதிகாரிகள் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில்தான் என்று அவர் தெரிவித்து இருந்தார். எனவே சாதிக் கயிறு வழக்கம் இருக்கிறது என்பதற்கு சான்று இருக்கிறது. எப்படி அமைச்சர் அதை உடனே மறுக்கலாம். எச் ராஜா சொன்னால் உடனே அமைச்சர் பயந்து மறுத்துவிட்டார் என்று பொருள் ஆகாதா? செங்கோட்டையனிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை.
மருத்துவர் ராமதாஸ் அவர்களும் சாதிக் கயிறு பற்றி முரணாகத்தான் பேசியிருக்கிறார். காசிக்கயிறு கட்டுவது மத நம்பிக்கையின் அடையாளம் என்கிறார். யார் மறுக்கிறார்கள்? காசிக் கயிறுக்கும் சாதிக் கயிறுக்கும் வித்தியாசம் தெரியாதா?
வயதுக்கு வந்த பெரியவர்கள் கூட ஏன் ஒரு சில அமைச்சர்களும் கூட வளையல் அணிவது போல் வண்ண வண்ண நிறங்களில் கயிறுகள் கையில் அணிந்திருக்கிறார்கள். அதை யாரும் சாதிக் கயிறு என்று சொல்வதில்லை. ஏன் என்றால் அவர்கள் நம்பிக்கையில் பேரில் அணிகிறார்கள்.
ஆனால் பள்ளி மாணவர்கள்? அதில் அரசியல் செய்யலாமா? சாதி வெறியை பள்ளியிலேயே புகுத்தலாமா?
அரசியல் செய்ய மாணவர்களின் எதிர்காலத்தை அரசே பணயம் வைக்கலாமா?
This website uses cookies.