ஐந்தாவது எட்டாவது வகுப்பு வரையில் பள்ளிக் குழந்தைகளை தேர்வில் வெற்றி பெற வில்லை என்ற காரணத்திற்காக நிறுத்தி வைப்பதில்லை என்ற முடிவை பல ஆண்டுகளாக ஆய்வு நடத்தி நெடிய விவாதத்திற்குப் பின் எடுத்து இலவச கட்டாய கல்விச்சட்டம் 2009 ன் படி அமுல்படுத்தப் பட்டு வழக்கத்தில் இருந்து வருகிறது.
இதனால் கல்வியின் தரம் கெட்டுவிட்டதாக குற்றச்சாட்டு எதுவும் இல்லை.
தமிழக அரசின் நிலைப்பாடும் அதுதான். அதையே கடந்த 2016 ம் ஆண்டு டெல்லியில் நடந்த மத்திய கல்வி ஆலோசனை குழு கூட்டத்திலும் ( Central advisory board of education ) தமிழக அரசின் சார்பில் வலியுறுத்தப் பட்டது.
இந்நிலையில் மாநில பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. அதில் ஐந்தாவது எட்டாவது வகுப்புகளுக்கு கட்டாயக் கல்வி சட்டத்தின் படி தேர்வுகள் நடத்தப் படும் என்றும் தேர்வில் வெற்றி பெறாத குழந்தைகளுக்கு மறு வாய்ப்பும் அளிக்கப் பட்டு தேர்வு பெறாவிட்டால் அவர்களை நிறுத்தி வைப்பது அந்த பள்ளியின் விருப்பம் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.
இதை பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அனுமதியில்லாமல் அனுப்பினார்களா? சென்ற ஆண்டு கட்டாயக் கல்வி சட்டத்தில் மாற்றம் செய்து தேர்வு வைக்கலாம் நிறுத்துவதும் நிறுத்தாததும் அந்தந்த மாநில அரசுகளின் விருப்பம் என்று ஒரு திருத்தம் செய்தார்கள். அந்த திருத்தத்தை பயன் பயன்படுத்தி இப்போது இந்த சுற்றறிக்கை அனுப்பப் பட்டிருக்கிறது.
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எந்த ஆண்டும் போர்டு தேர்வு இருக்காது என்று சொன்னாரே தவிர இந்த சுற்றறிக்கையை அனுப்பியது எப்படி என்ற கேள்விக்கு பதில் சொல்ல வில்லை. இன்று வரை அந்த சுற்றறிக்கை திரும்ப பெறப்படவுமில்லை. அனுமதி இல்லாமல் அனுப்பப் பட்டிருந்தால் அனுப்பியவர் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து விளக்கம் தரவும் இல்லை.
பெரும்பாலும் பிற்பட்ட தாழ்த்தப் பட்ட மாணவர்கள் பயனடையும் இந்த திட்டத்தில் கை வைப்பதின் நோக்கம் அவர்களில் ஒரு பகுதியினரை யாவது மேலே படிக்க விடாமல் செய்வது என்ற நோக்கத்தை தவிர வேறு என்ன இருக்க முடியும்?
பத்தாயிரம் ஆண்டுகளாக கல்வி கற்கும் உரிமையை மற்றவர்களுக்கு மறுத்தவர்கள் எல்லா கால கட்டத்திலும் அதே முயற்சியை மீண்டும் மீண்டும் வெவ்வேறு தளங்களில் முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
சாதாரண தேர்வுகள் சுமுக சூழ்நிலையில் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஓரளவு முதிர்ச்சி பெற்ற எட்டாவது தாண்டிய பிள்ளைகள் பிளஸ் டூ படிப்பில் பொதுத்தேர்வை எதிர்கொண்டால் போதும் என்ற நிலையைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் பிள்ளைகளின் படிப்பை பாதியில் நிறுத்த செய்த முயற்சிக்கு யார் காரணம் என்று கண்டறிந்து தக்க தண்டனை வழங்கினால் தான் எதிர்காலத்தில் இத்தகைய முயற்சியை கைவிடுவார்கள்.
இடையில் உடனடியாக, போர்டு தேர்வு என்ற சுற்றறிக்கையை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும்.