கல்வி

செங்கோட்டையனை மீறி பள்ளிக்கல்வித் துறையை ஆட்டுவிக்கும் சக்தி எது?

Share

பலமுறை பள்ளிக்கல்வித் துறையின் அறிவுப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்திருக்கிறார்.

இப்போது ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் எட்டாம் வகுப்பு மானவர் களுக்கு  தினந்தோறும் பள்ளி முடிந்தவுடன் ஒரு மணி நேரம் சிறப்பு வகுப்பு நடத்தப் படும் என்று அறிவிக்கிறார். அது தவறு என்று பின்னால் விளக்கம்  கொடுக்கின்றனர்.

அமைச்சர் செங்கோட்டையன் இல்லையில்லை பள்ளிக் கல்வி  நேரத்தில் தான் சிறப்பு வகுப்பு நடத்தப் படும் அதுவும் மாணவர்கள் விரும்பினால் வரலாம் என்று சொல்கிறார். ஏன்  இந்த தடுமாற்றம்.?

அமைச்சருக்கு தெரியாமலேயே என்னென்ன்னவோ நடக்கிறது என்ற புகாரில் உண்மை இருக்கிறதா என்பதை கல்வித் துறைதான் தெளிவுபடுத்த வேண்டும்.

குறிப்பாக மத்திய அரசு தனது திட்டங்களை அமுல்படுத்துவதில் மும்முரமாக இருக்கிறது.    அதற்கு மாநில  அரசு ஒத்து ஊத வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.   மாநில அரசின் நடவடிக்கைகளும் அப்படித்தான் இருக்கின்றன.

மாணவர்களுக்கு தேவையில்லாத மனச்சுமையை திணித்து அவர்களை கல்வியை தொடர்வதில் இருந்து விரட்ட வேண்டும்  என்ற ரீதியில் தான்  மத்திய அரசின் புதிய கல்வி திட்டம் வர இருக்கிறது.

அதை முன்கூட்டியே அமுல்படுத்தி நாங்கள் உங்கள் அடிமைகள் என்பதை சொல்லாமல் சொல்கிறதா அதிமுக அரசு?

இன்று எல்லாருக்கும் மடிக்கணினி வழங்க நிதி நிலை இடங்கொடுக்க வில்லை என்ற சாக்கில் நான்கு பேருக்கு ஒரு கணினி தான் தர முடியும் என்று அறிவித்திருக்கிறார்கள்.

உண்மையான காரணம் நிதி  நிலையா ? திட்டத்துக்கு மூடு விழா நடத்த முன்னோட்டமா?

ஏழை மாணவர்கள் மடிக்கணினி பெற்று அறிவு வளர்ச்சி பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல் திட்டதையே கைவிடுகிறார்கள் என்றுதான் மக்கள் நினைப்பார்கள்.    ஜெயலலிதா பெயரை சொல்லி ஆட்சி  நடத்துபவர்கள் அவரது திட்டங்கள் ஒவ்வொன்றாக கைவிடப் படுவதை ஏற்கிறார்களா?

செங்கோட்டையனை சுதந்திரமாக செயல்பட விடாமல் மத்திய அரசின் பிரதிநிதி ஒருவர் நியமிக்கப்பட்டு அவர் மறைமுகமாக மத்திய அரசின் திட்டங்களை செயல் படுத்த முனைகிறார் என்ற குற்றச்சாட்டை தவறு என்று நிரூபிக்க வேண்டிய கடமை மாநில அரசுக்கு இருக்கிறது.

This website uses cookies.