ஏ.ஆர்.ரகுமான் மும்பையில் தாராவியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் மேடையில் தோன்றிய மகள் கதீஜா பர்தா அணிந்திருந்தார்.
ரகுமான் சொல்லித்தான் மகள் பர்தா அணிந்து தோன்றினார் என்று விமர்சங்கள் எழுந்தன. இஸ்லாத்தை தழுவிய பின்பும் ரகுமானின் இசையை ரசிக்க மதம் ஒரு தடையாக இருந்ததில்லை. அவர் தன் மகளை பர்தா அணிய நிர்பந்தித்து இருப்பாரா என்ற கேள்வியும் எழுந்தது.
பதில் சொல்கிற வகையில் அவர் மனைவியும் இன்னொரு மகளும் பர்தா இல்லாமல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு உடை அவரவர் விருப்பம் என்ற ரீதியில் பதிவிட்டிருந்தார்.
உடை சுதந்திரம் தான். ஆனால் எதுவும் நம் நாட்டில் பிரச்னை ஆக்கப்படும் என்பது தெரிந்தது தானே.
அதுவும் திரைத்துறையில் வெளிப்படை தன்மையை எதிர்பார்க்கும் தன்மை அதிகம்.
அதற்காக உடலை வெளிக்காட்ட வேண்டும் என்று பொருள் அல்ல. இதுவரையில் முகத்தை மறைத்துக் கொண்டு எந்த ஒரு சினிமா கலைஞரும் பணி செய்ததாக நமக்குத் தெரியவில்லை.
இதில் ரகுமானை குற்றம் சொல்ல எதுவும் இருப்பதாக தெரியவில்லை. ஏனென்றால் ஒரு மகளை பர்தா இல்லாமலும் மற்றவரை பர்தா வோடும் பார்க்கும் போது பெற்றோர் மகள்களின் உடைகளில் தலையிடுவது இல்லை என்பது தெரிகிறது.
எப்படியிருந்தாலும் ஒருவரின் தனிப்பட்ட உரிமையை விமர்சிப்பது நாகரிகம் அல்ல.