கமலின் தேவர் மகன் 2 விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் டாக்டர் கிருஷ்ணசாமி??!!

devar-magan-2
devar-magan-2

கமல்ஹாசன்  சிவாஜி கணேசன் நடித்த தேவர் மகன் பெரிய வெற்றியை பெற்றது.

அதற்கடுத்து கமல் ஹாசன் சண்டியர் என்ற தலைப்பில் படம் எடுக்க முனைந்தபோது அப்போதும் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்தார்.   படத்தின் பெயர் விருமாண்டி என மாற்றப் பட்டு வெளியாகி வெற்றி பெற்றது.

கமல் ஒரு சினிமா வியாபாரி. எந்த   சாதியையும்  தூக்கி பிடிப்பது அவரது வேலையல்ல.   எதை சொன்னால் யாரிடம் வெற்றி பெரும் என்ற கணக்கே சினிமாவை தீர்மானிக்கிறது.   எல்லா சாதிகளையும் தனக்கு உழைக்க வைப்பதே அவரது இலக்கு.

இப்போது மார்கெட் இழந்த நிலையில் எதையாவது செய்து மீண்டும் வெளிச்சத்தில் நிற்க பணம் சம்பாதிக்க பார்ப்பது அவரது நோக்கம்.  அதில் விளைந்ததுதான் தேவர் மகன் 2  திரைப்படம்.

அதையும் எதிர்த்து விளம்பரம் தேடவும் முக்கியத்துவம் பெறவும் டாக்டர் கிருஸ்ணசாமி முயற்சித்திருக்கிறார்.

தனது அறிக்கையில் ——மகன் 2 திரைப்படம் எடுக்கப் போவதாக அறிவித்து இருக்கிறீர்கள் என்று கமலுக்கு கடிதம் எழுதுகிறார். தேவர் என்ற பெயரை தவிர்த்து எழுதுகிறார்.

இதே கிருஷ்ணசாமி சபாஷ் நாயுடு என்ற பெயரில் படம் எடுக்கும்போது எதிர்ப்பு தெரிவிக்க வில்லை. ஆக அவர் சாதிக்கு  எதிராக இல்லை.    குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமே தான் எதிரி என அறிவித்துக் கொள்கிறார். இது நல்லதா நல்ல விளைவுகளை ஏற்படுத்துமா என்பதை அவர்தான் சிந்திக்க வேண்டும்.

தேவேந்திரர் மகன் என்று படம் எடுங்கள் என்றும் கோருகிறார். எடுத்தால் படம் நன்றாக ஓடும் என்றும் கூறுகிறார். யாரையும் இப்படி கட்டாயப் படுத்த முடியும் என்று பேசுவதும் எழுதுவதும் சட்டப்படி சரியா என்பது கேள்விக்குறி.

பார்வர்டு ப்ளாக் தலைவர் கதிரவன் ஆட்சேபணை தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

சாதி ஒழிய வேண்டும் என்று நோக்கம் கொண்டவராக இருந்தால் முதலின் அவர் தேவேந்திரர் சாதி அமைப்பிலிருந்து வெளி வர வேண்டும். சாதியை சட்ட பூர்வமாக ஒழிப்பது பற்றி ஒத்த கருத்துக் கொண்டவர்களோடு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

ஆனால் சாதியை சட்ட பூர்வமாக ஒழிக்க முடியுமா என்பது மிகப் பெரிய கேள்விக்குறி. ஆனால் அரசியல் தலைவர்கள் சாதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து சாதி மோதலுக்கு வழி ஏற்படுத்தி  விடக்கூடாது.

கனன்று கொண்டிருக்கும் ஏரி  தழலைப் போன்றது சாதிய உணர்வுகள்.   அதை அணைக்க முயற்சிக்க வேண்டுமே தவிர ஊதி பெரிதாக்க எந்த வகையிலும் முயற்சிக்க கூடாது.

யாரும் தங்களை உயர்த்தி பெருமை பேசுவது கூட தவறில்லை.   தேவேந்திரர் சாதிப் பெருமையை மட்டுமே அவர் முன்னிருத்தினால் யாரும் கேள்வி கேட்கப் போவதில்லை.    பிறரை தாழ்த்திப் பேசும்போது பிரச்னை எழும்.

இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருக்கும் அவருக்கு இது தெரியாதா.   நிச்சயம் தெரியும்  . தெரிந்தே அரசியல் ஆதாயம் அடைய சாதியை  பயன் படுத்துகிறார் .

பொதுவாகவே சாதிப் பெயரில் சினிமா எடுப்பதை பொது மேடை எதிர்த்தே வந்திருக்கிறது.    சபாஷ் நாயுடு விளம்பரம் வந்தபோது நாம் கண்டித்தே எழுதினோம்.

அந்த வகையில் கமல் எந்த சாதியை வைத்தும் சினிமா எடுக்க வேண்டாம்.   அதேநேரம் டாக்டர் கிருஷ்ணசாமி போன்றவர்கள் சாதிப் பூசலை ஊதிப் பெரிதாக்கும் முயற்சியிலும் இறங்க வேண்டாம்.

பெரிய நடிகர்கள் நடிக்கும் படங்களுக்கு மட்டுமே இது போன்ற பிரச்னைகள் .   சாதாரணமானவர்கள் தயாரிக்கும் எந்த படமும் பிரச்னைக்கு உள்ளாவதில்லை.

டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஒரு வேண்டுகோள்;  தேவர்-தேவேந்திரர் இடையே நல்லிணக்கத்தை , ஒற்றுமையை   நிலைப்படுத்த உறுதி பூணுங்கள்.    உங்களைப் போன்ற படித்தவர்கள் இதைசெய்யத் தவறினால் காலம் உங்களை மன்னிக்காது.

இத்தனை சோதனைகளுக்கு இடையிலும் இருவரும் இணைந்து தான் வாழ்கிறார்கள்.  இனியும் வாழ்வார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை இன்றில்லை.   இன்றிக்கும் ஒருசில பிணக்குகளும் நாளை இருக்காது.

தாழ்த்தப் பட்ட பிரிவினரில் அருந்ததியருக்கு தனி ஒதுக்கீட்டை எதிர்த்து தனது பெரிய மனதை வெளிக் காட்டியவர்தான் டாக்டர் கிருஷ்ணசாமி.

டாக்டர் கிருஷ்ணசாமிகள் நல்லது பேசட்டும்.    அல்லது பிரச்னைகளை உருவாக்காமல் செயல்படட்டும் .