விஜயின் ‘சர்கார் ‘ படம் கதை திருட்டு சர்ச்சையில் சிக்கி சமரசம் ஆகி ஒரு வழியாக வெளியாகி விட்டது.
ஆனால் புது சர்ச்சையில் சிக்கி கொண்டுள்ளது. அதாவது படம் அதிமுக ஆட்சியையும் அதன் இலவச திட்டங்களையும் தவறாக சித்தரிப்பதாகவும் அவைகளை நீக்க வேண்டும் என்றும் இல்லாவிட்டால் முதல் அமைச்சரை கலந்து கொண்டு தேவையான நடவடிக்கை களை எடுக்க இருப்பதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்திருக்கிறார்.
படம் மொத்தமும் அதிமுக வை சுற்றியே வருகிறது. ‘அனைத்து இந்திய ‘ அடைமொழியுடன் கூடிய கட்சி பெயர், இலவசங்களை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்குவது, சிகிச்சையில் இருக்கும் தலைவருக்கு மகளே அதிக மாத்திரைகளை கொடுத்து இறப்புக்கு காரணமாக இருப்பது, தலைவரின் சமாதி கடற்கரையில் இருப்பது அங்கே மனைவி செல்வது, கொலைக்கு சாட்சியாக மனைவியே வாக்குமூலம் தருவது, ஆட்சிக்கு வந்தபின் தலைவரின் இறப்புக்கு காரணமான மகளை சிறைக்கு அனுப்புவது என்று ஏறத்தாழ அதிமுக கட்சியின் நிகழ்வுகளை போன்றே சம்பவங்கள் கட்டி எழுப்பப் பட்டிருக்கின்றன. வரலட்சுமியின் தோற்றம் சசிகலாவை ஒத்தது என்கிறார்கள்.
பொது மக்களை எப்படி இந்த படம் ஈர்க்கப் போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். எந்த படமும் இரண்டு மூன்று வாரங்களுக்கு மேல் ஒருவது இல்லை. அதற்குள் வசூலை எடுத்து விட வேண்டும்.
அரசியல் நேர்மை பற்றி பேசும் படம் திரையில் காட்டப்படுவதில் எத்தனை ஊழல்? ரசிகர் மன்றங்கள் டிக்கெட் விலையை ஏற்றி விற்பது மட்டுமல்ல தியேட்டரே அதிக விலைக்கு விற்க கட்டாயப்படுத்தப்படுகிறதே அது என்ன வகை நேர்மை?
என்ன வகையான அரசு அமைய வேண்டும் என்பதை சொல்லாமலேயே படம் முடிகிறது. எல்லாரும் சொல்லும் மக்கள் நல அரசு அமைய நல்லவர்களை தேடி கொண்டுவருவோம் என்கிறார்களே அவர்கள் எப்படி கிடைப்பார்கள்?
மக்கள் அத்தகையவர்களை தேர்ந்து எடுக்கத்தான் தேர்தல். அதற்குத்தான் போட்டி? மக்கள் காசு வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்கக் கூடாது என்ற குரல் ஏன் அழுத்தம் தந்து கூறப் படவில்லை?
எது எப்படியானால் என்ன? வசூல் தானே ‘சர்காரின்’ இலக்கு!