ரசிகப்பசங்க செய்யும் அட்டகாசங்களை தடுக்க சட்டத்தில் வழியே இல்லையா??!!

ajith-cut-out
ajith-cut-out

ரசிகர் மன்றங்கள் செய்யும் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த சட்டம் வேண்டும்.    அல்லது இருக்கும் சட்டங்களை பயன்படுத்தி அவர்களை கட்டுப்  படுத்த வேண்டும்.

சினிமா நடிகர்களுக்கு என்று இருக்கும் ரசிகர் மன்றங்கள் செய்யும் அட்டகாசங்கள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் சினிமா ரசிகர்களால் அரசியல் அதிகாரம் நிர்ணயிக்கப் பட்டு வந்திருக்கிறது. 

                இனியும் அது தொடர வேண்டுமா?

தொடக்கத்திலேயே அரசியல்வாதிகள் நடிகர்களையும் அவர்களது மன்றங்களையும் தங்கள் அரசியல் இலக்குகளுக்காக பயன்படுத்த துவங்கிய காரணத்தால் இப்போது அவர்கள் தமிழ்நாட்டில்  தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறியிருக்கிறார்கள் .

இன்று ரஜினி, அஜித் படங்கள் இரண்டு வெளியாகி இருக்கின்றன. பேட்ட, விஸ்வாசம்.

சட்டத்தை மதிக்காது அரசு அனுமதி பெறாமல் ஐந்து  காட்சிகள். பொங்கல் பண்டிகையின் போது பொதுமக்கள் பணத்தை யார் அதிகம் சுருட்டுகிறார்கள் என்பதில் தான் போட்டி. ஒரு  தியேட்டருக்கு ஐம்பதாயிரம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டிருக்கிறது.

மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் தங்கள் தொழிலை செய்வதிலும் அதில் மக்கள் ஈடுபாட்டுடன் கொண்டாடுவதும் வரவேற்கத் தக்கதே.

கலைஞர்களை  போற்றாத சமூகம் உணர்வற்றுப் போனதாக கருதப் படும். ஆனால் கலைஞர்களை கலைஞர்களாக மட்டுமே போற்ற வேண்டும். ஆட்சியாளர்களாக அல்ல. அதற்கு அந்த கலைஞன் தன்னை தகுதியான அரசியல்வாதியாக நிரூபிக்க வேண்டும். அப்படியா நடக்கிறது இங்கு?

ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது.?

அதிக விலைக்கு டிக்கெட்டுகள் விற்பது நியாயமா? அதை ரசிகர்கள் ஊக்கப்படுத்த வேண்டுமா?

அஜித் கட் அவுட்டிற்கு பால் அபிஷேகம் செய்ய  முயன்ற போது  கட் அவுட் கீழே விழுந்து ஐந்து ரசிகர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். நல்ல வேளையாக வேறு எதுவும் ஆகவில்லை.

ஒரு அஜித் ரசிகன் தந்தை பணம் கொடுக்கவில்லை என்று அவரை பெட்ரோல் ஊற்றி கொளுத்தியிருக்கிறான் .

ஒரு தியேட்டரில் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கத்திக்குத்து பட்டு இருவர் அவசர சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ஜப்பான் ரசிகர்களை பேட்டி எடுத்து இமேஜை பெரிதுபடுத்துகிறார்கள்.

இரண்டு தியேட்டர்களில் திருமணங்கள் நடத்தி இருக்கிறார்கள். நல்ல காரியம்தான்.  அதை இப்படி நடத்துவது யாருக்கு பெருமை சேர்க்க? யாரை இழிவுபடுத்துகிறீர்கள்?

இவைகள் எல்லாம் வரவேற்கத்தக்க போக்குகளா? மக்களின் தரத்தை நிர்ணயிக்கும் போக்குகளா?

தமிழனின் தரத்தை இந்த நிகழ்வுகள்தான் நிர்ணயிக்கும் என்றால் நாம் தலை கவிழத்தான் வேண்டும்.

தமிழனின் தலையை நிமிர வைக்கும் தலைமை அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும்.