சாத்தூரில் அரசு மருத்துவமனை கர்ப்பிணி பெண்ணுக்கு ரத்தம் செலுத்தி எச்.ஐ.வி நோயை பரப்பியது கொடுமையிலும் கொடுமை.
ரத்த தானம் வழங்கிய வாலிபர் எச்.ஐ.வி தொற்று தனக்கு இருப்பது தெரியாமலே கொடுத்திருக்கிறார். பின்பு அவரே மறு பரிசோதனையில் தனக்கு எச்.ஐ.வி இருப்பது தெரிந்து மனசாட்சியுடன் மருத்துவமனைக்கு தெரிவித்து யாருக்கும் தந்து விடாதீர்கள் என்று கேட்டுக் கொள்ள அதற்குள் அவரது ரத்தம் கர்ப்பிணி பென்னுக்குதரப்பட்ட செய்தி அப்போதுதான் வெளியாகிறது.
தவறு எங்கே நிகழ்ந்தது என்று அறிய அரசு ஆறு பேர் கொண்ட குழுவை அமைத் திருக் கிறது. உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
என்ன செய்து என்ன? அந்த பெண் தனக்கும் மட்டுமல்லாது தனது குழந்தைக்கும் எச்.ஐ.வி நோய்தொற்று சிகிச்சையை வாழ்நாள் முழுதும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். அது எவ்வளவு பெரிய தண்டனை. எந்த குற்றமும் செய்யாமலே இப்படி ஒரு தண்டனையா?
அரசு மருத்துவ மனைகளில் ரத்த வங்கிகள் எப்படி இயங்குகின்றன எனபதற்கு சான்றாகவே இந்த சம்பவம் பார்க்கப்படும்.
இதேபோல் சென்னை பெண் ஒருவருக்கும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் எச்.ஐ.வி தொற்று உள்ள ரத்தம் கொடுக்கப்பட்டதாக இப்போது புது புகார் வந்திருக்கிறது.
அரசு விசாரணை முடிவு வரட்டும் குற்றவாளிகள் தண்டிக்கப்படட்டும். இனி இதுபோல் தவறு மீண்டும் நிகழாமல் அரசு யந்திரம் உறுதி செய்யட்டும்.
அதற்கும் மேல் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, சமுதாயத்தால் ஒதுக்கி வைக்கப்படும் வாய்ப்புள்ள அந்த பெண்ணுக்கும் குழந்தைக்கும் போதுமான இழப்பீடை அரசு வழங்க வேண்டும்.
இதை விபத்து என்று சொல்ல முடியாது. சாதாரண அலட்சியமும் அல்ல. அதற்கும் மேலே கொடிய குற்றம்.
குறைந்தது ரூபாய் ஒரு கோடிக்கும் குறையாமல் அந்த பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அரசு உடனடியாக வழங்குவதுடன் நோய் பாதிப்பில் இருந்து காப்பாற்ற ஆகும் முழு செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
நீதிமன்றம் சொல்லித்தான் எல்லாவற்றையும் அரசு செய்ய வேண்டும் என்று இல்லை. தன் அறிவைக் கொண்டும் செய்யலாம். மனம்தான் வேண்டும்.
This website uses cookies.