இன்று சர்வதேச யோகா தினம்; தமிழரின் பங்கும் உண்டு !!!

yoga-tamilnadu
yoga-tamilnadu

இன்று சர்வதேச யோகா தினம் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்து இருக்கிறது.

எல்லா நாடுகளிலும் யோகா பரவியிருக்கிறது.

இதற்கு மத சாயம் பூசக் கூடாது. யோகாவிற்கு மதமில்லை. இது ஏதோ இந்து மதத்திற்கு மட்டுமே சொந்தமானது போல பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது.

பதஞ்சலி யோகம் தந்த முனிவரின் காலம் கிமு 1ம் நூற்றாண்டு. அதற்கும் முன்பே யோகக் கலை இருந்திருக்கிறது.

திபெத்திய புத்த பிட்சுக்கள் கடுமையான யோகா பயிற்சியாளர்கள். அவர்களால் எத்தகைய உறைபனி நிலையிலும் சாதரணமாக வாழ முடியும். உடைகளை தங்கள் உடற்சூட்டினாலேயே காய வைத்துக் கொள்வார்களாம். இத்தகைய பயிற்சிக்கும் மதத்துக்கும் என்ன தொடர்பு?

தமிழர் சமயம் நூலில் கண்டவாறு “ஆதி தமிழர் காலத்தில் சித்தர்கள் யோகம் பயின்றவர்கள். அவர்கள் அதை ஓகம் என்று அழைத்தார்கள். இரசவாதம் பயின்றவர்கள் அவர்கள். காய கற்பத்தின் துணை கொண்டு மூச்சினை அடக்கி அதனால் ஏற்படும் வெப்பத்தினால் உடம்பின் சத்தை அமிர்தமயமாக்குதல், உடம்பை இலேசாக்குதல், கனமாக்குதல், கூடு விட்டு கூடு பாய்தல் முதலிய அருந்தொழில்கள் யோக முயற்சியின் பயனாகும். யோக முயற்சியை தமிழர்கள் தவம் என்ற சொல்லாற் குறிப்பித்தனர்.

தவத்தினால் வேண்டிய வேண்டியாங் கெய்துப எனவும் கூற்றங் குதித்தலுமாகும் எனவும் ஆசிரியர் திருவள்ளுவர் கூறியது காண்க.

ஏற்றி யிறக்கி இருகாலும் பூரிக்கும் காற்றைப்  பிடிக்கும் கணக்கறிவாரில்லை காற்றைப் பிடிக்குங் கணக்கறிவாளர்க்குக் கூற்றை உதைக்குங் குறியது வரமே என்று திருமூலர் கூறியது காண்க. ”

உடற்பயிற்சி என்பதைத் தாண்டி மனம் தூய்மைப்படுவதே யோகம் எனலாம்.

பிரதமர் மோடி முதல் எல்லா மாநிலங்களிலும் பாஜக வினர் முன்னெடுப்பதால் அது அவர்களுக்கு சொந்தம் என்று எண்ணாமல் எல்லாரும் தினமும் யோகா பயிற்சி செய்வதே நலம் பயக்கும்.

நமக்கு சொந்தமானதை நாம் மறந்ததை மீண்டும் நினைவில் கொண்டு பயிற்சியை தொடர்வோம்.