பாஜக 1980 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ம் தேதி உருவானபோது நிறுவனர்களில் ஒருவராக விளங்கியவர் எல் கே அத்வானி.
ஆறு முறை காந்திநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தேடுக்கப்பட்டவரை இந்த தேர்தலில் ஒதுக்கிவிட்டது மோடி-அமித்ஷா கூட்டணி. எழுபது வயது தாண்டியவர்களுக்கு பதவி கிடையாதாம்.
ஏதோ ஒரு சாக்கு. தனது அதிருப்தியை அப்போதைக்கப்போது வெளியிடும் அத்வானி நேற்று தனதுபதிவில் குறிப்பிட்ட கருத்துக்கள் அவரது மன உளைச்சலை தெளிவாக காட்டியது.
‘ முதலில் நாடு. அடுத்து கட்சி. கடைசியாகத்தான் தன் நலன். இதுவே நான் எனது வாழ்க்கையில் கடைபிடிக்கும் கொள்கை. ‘
‘இந்திய ஜனநாயகத்தின் உண்மையான பொருள் என்னவென்றால் பன்முகத் தன்மைக்கு மரியாதை அளிப்பதும் கருத்து சுதந்திரமும் தான். ஆரம்பத்தில் இருந்தே பாஜக அரசியல் ரீதியாக எங்களை ஏற்றுக் கொள்ளாதவர்களை நமது எதிரிகளாக கருதுவதில்லை. அவர்கள் நமது எதிர்ப்பாளர்கள் மட்டுமே.”
” அதேபோல் இந்திய தேசிய வாதத்தில் அரசியல் ரீதியாக நம்மை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தேச விரோதிகள் என்றும் நாம் ஒருபோதும் கருதுவதில்லை. பாஜக ஒவ்வொரு குடிமகனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் அளவிலான கருத்து சுதந்திரத்தை ஏற்றுக் கொண்டுள்ளது.”
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தேச துரோக குற்றத்தை நீக்குவோம் என்ற நிலைப்பாட்டையும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியில் நமது ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் பற்றிய ஆதாரங்களை கேட்டவர்களையும் தேச துரோகிகள் என்று பாஜக தலைவர்கள் சாடியதை பார்த்தோம்.
இந்நிலையில் அத்வானியின் இந்த அறிவிப்பு மோடிக்கு எதிரானதாக பிரச்சாரம் செய்யப் படக் கூடும் என்பதை அனுமானித்த பிரதமர் மோடி உடனே சாதுரியமாக அதையே தனக்கு சாதகமாக பயன் படுத்தி விட்டார். பதில் அளித்த மோடி தனது பதிவில் ,
“அத்வானி பாஜக வின் உண்மையான கருத்தை மிகச் சரியாக கூறியுள்ளார். முதலில் தேசம் அடுத்து கட்சி இறுதியாக நாம் என்ற வழிகாட்டு மந்திரம் மிகவும் முக்கியமானது. பாஜக வின் செயல்வீரராக இருப்பதில் பெருமை கொள்கிறேன். அத்வானி போன்றவர்களின் வாழ்த்து அதனை மேலும் வலுப்படுத்தும்.”
மீசையில் மண் ஓடவில்லை என்று மோடி வேண்டுமானால் மார் தட்டிக் கொள்ளலாம்.
இதுவரை மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை எப்படியெல்லாம் மோடியும் பாஜக வின் அமித் ஷா உள்ளிட்ட இதர தலைவர்களும் கொச்சையாக விமர்சித்தார்கள் என்பதை நாடு அறியும்.
அத்வானி பேசத் தொடங்கி விட்டார். இனி நிறுத்த மாட்டார். நிறுத்தக் கூடாது என்று நாடு எதிர்பார்க்கிறது.
பாஜக வை பலவீனப் படுத்த வேண்டும் என்பதற்காக இதை சொல்லவில்லை. பாஜக மற்ற நாட்டுப் பற்றாளர்களை கொச்சைப்படுத்தக் கூடாது என்பதற்காக கூறுகிறோம்.
அத்வானி முன்பொருமுறை பாகிஸ்தான் சென்றபோது அந்த நாட்டு பாராளுமன்றத்தில் பேசும்போது முகமது அலி ஜின்னா கூறிய வார்த்தைகளை மேற்கொள் காட்டி இந்தியாவும் பாகிஸ்தானும் எப்படி சகோதர உணர்வோடு வாழ வேண்டும் என்று பேசினார். உடனே பாஜக வில் இருந்த பார்ப்பன சக்திகள் அவரை ஏதோ நாட்டுக்கு எதிரி என்ற அளவில் மோசமாக விமர்சித்தார்கள். அதுவும் பிரவீன் தொக்காடியா என்ற பார்ப்பன வி ச் பி தலைவர் மிகவும் கேவலமாக விமர்சித்தார். ஆர் எஸ் எஸ் கள்ள மௌனம் சாதித்தது. ஏனென்றால் அத்வானி பார்ப்பனர் அல்லவே. சிந்தியாயிற்றே??!!
இப்போதும் மோடி -அமித் ஷா கூட்டணி அத்வானியை ஆர் எஸ் எஸ் ஆமோதிப்பில்லாமல் ஒதுக்கி இருக்க முடியாது.
பாஜக வில் எப்போதும் பார்ப்பனர்கள் அல்லாதவர்கள் பார்ப்பனீயத்தை உயர்த்திப் பிடிக்க மட்டுமே பயன் படுத்தப் படுவார்கள்.
இந்த விதிக்கு மோடியும்-அமித் ஷா கூட்டணியும் கூட விதி விலக்கல்ல என்பது வரலாறு உணர்த்தும்.