2019 ல் பா ஜ க தமிழ்நாட்டில் அ தி மு க வோடும் ரஜினியுடனும் கூட்டு வைத்து தான் தேர்தலை சந்திக்கும் என்ற நிலைமைதான் இன்று.
அதற்கு முன்னோட்டம் தான் நாடாளுமன்றத்தில் தெலுகு தேசம் கட்சி யால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் வேணுகோபால் மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்போக்கையும் பாரபட்சத்தையும் கண்டித்து பேசிய பிறகு பிறகு நடந்த வாக்கெடுப்பில் மோடியின் அரசின் மீது நம்பிக்கை இருப்பதாக ஆதரவு வாக்கை அளித்துள்ளது.
பல்கலை மானிய கமிஷனை நீக்கி உயர்கல்வி கமிஷனை கொண்டு வர அ தி மு க எதிர்ப்பு தெரிவித்தது. அதேபோல் அணை பாதுகாப்பு மசோதாவையும் அதிமுக எதிர்த்தது. நிதி ஒதுக்கீடில் பாரபட்சம் காட்டப் படுவதையும் எதிர்த்தது. இவ்வளவு கடுமையாக எதிர்த்துவிட்டு ஏன் ஆதரித்து வாக்களிக்க வேண்டும்?
சிவசேனை பிஜுஜனதாதளம் கட்சிகளே வெளிநடப்பு செய்தன.
அமைச்சர் ஜெயகுமார் மகனும் அதிமுக எம்பியுமான ஜெயவர்தன் பேசும்போதும் மத்திய அரசு மாநில விவகாரங்களில் தலையிடுவதை கண்டித்து பேசினார்.
வருமான வரித்துறை சமீப நாட்களாக முதல்வரின் உறவினர் செய்யாதுரையின் வீட்டில் நடத்திய ரைடுகள் 120 கோடி பணம் 103 கிலோ தங்கம் பறிமுதல் வரை என்பதாக செய்திகள் வந்தன. அதை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதி படுத்தியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில் எப்படி எடப்பாடி மோடிக்கு எதிராக வாக்களிக்க ஒப்புக் கொள்வார்?
ரஜினியின் சமீப கால, எட்டு வழி சாலைக்கு ஆதரவு பேச்சு செங்கோட்டையனுக்கு பாராட்டு போன்றவை அவரை அதிமுகவுக்கு அருகில் கொண்டு செல்கிறது.
ரஜினி பா ஜ க வின் ஆள் என்பது எல்லாருக்கும் தெரியும்.
இந்த முக்கூட்டணி மக்களிடம் எடுபடுமா?
பாஜக வுடன் யார் சேர்ந்தாலும் அவர்கள் மக்களால் ஓரங்கட்டப் படுவார்கள்.
இது தமிழ்நாட்டு நீதி!