நரேந்திர மோடி மீண்டும் அரியணை ஏறியிருக்கிறார்.
இது பாஜகவின் வெற்றியா? ஆர்எஸ்எஸ்-ன் வெற்றியா? கூட்டணி கட்சிகளின் வெற்றியா? பண பலத்தின் வெற்றியா? மத வாதத்தின் வெற்றியா?
கட்சி ரீதியில் பாஜக எல்லா மாநிலங்களிலும் பலம வாய்ந்த கட்சி என்று சொல்ல முடியாது. காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் பாஜகவை விட இயக்க ரீதியாக கட்டமைப்பு உள்ளவை. எனவே வெற்றிக்கு கட்சி மட்டுமே காரணம் இல்லை.
ஆர்எஸ்எஸ் மட்டுமே காரணம் இல்லை. ஏனென்றால் அதன் தாக்கம் எல்லா மாநிலங்களிலும் இருந்தால் பத்து மாநிலங்களில் பாஜக பிரதிநிதித்துவம் இல்லாமல் இருக்க முடியாது.
கூட்டணி கட்சிகள் அடையாளம் காணவே கடைசி நேரத்தில்தான் முடிந்தது. கூட்டணி இல்லாமலேயே பாஜக சில மாநிலங்களில் வெற்றி பெற முடிந்திருக்கிறது. சில கட்சிகள் வெளியேறிய போதும் வெல்ல முடிந்திருக்கிறது. வலுவான கட்சிகள் தமிழ் நாட்டில் கூட்டணியில் சேர்ந்த போனதும் வெல்ல முடியவில்லையே. ?
பண பலம் மட்டுமே காரணம் இல்லை. தமிழ்நாடு ஆந்திரா தவிர எங்குமே பணம் கொடுத்து வாக்குகள் வாங்கியதாக புகார்கள் கூட இல்லை. பாஜக எல்லா கட்சிகளையும் விட இந்திய அளவில் பண பலம் உள்ள கட்சிதான். பெரு நிறுவனங்களிடம் அதிக அளவில் நிதி பெற்றது உண்மைதான். ஆனால் பண பலத்தால் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது என்ற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகளே சுமத்தவில்லை.
மதவாதம். இந்து மத வாதத்தை பாஜக முன்னரே வலுவாக உருவாக்கி விட்டிருந்தது. அதுவே அதன் பலவீனம் ஆகவும் இருந்தது. முஸ்லிம் எதிர்ப்பு என்பது பாஜகவின் ரத்தத்தில் கலந்தது. கிறிஸ்தவ எதிர்ப்பு தன் இயற்கை குணம். சாக்ஷி மகராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, சாத்வி பிரக்யா சிங் போன்ற முழு மதவாதிகள் பாராளுமன்றம் செல்கிறார்கள். ஓரளவிற்கு மதவாதம் பாஜக வெற்றிக்கு உதவியதே தவிர அது மட்டுமே காரணமாக அமையவில்லை.
ஆக இறுதியில் பாஜக வெற்றிக்கு முழுமுதல் காரணம் தாமோதர தாஸ் நரேந்திர தாஸ் மோதி என்ற ஆளுமை மிக்க தலைமைதான்.
அவருக்கு சாதி தேவை இல்லை. பணம் சொத்து தேவையில்லை. குடும்பம் தேவை இல்லை. தனக்கென்று எதுவுமே தேவை இல்லை. ஆனால் தனக்கான தேவை அனைத்தையும் பெற்றுத்தரும் பதவி மட்டுமே குறி. அதில் மட்டும் தெளிவாக இருக்கிறார் மோடி. எனவே வெற்றி தானாகவே அவரை நோக்கி ஓடி வருகிறது.
இந்தி மாநிலங்களில் சில காலத்துக்கு முன்பு தோற்ற இடங்களில் பாஜக வென்றதற்கு காரணம் மோடிதான்.
நாட்டை பாதுகாப்பாக வைத்திருக்க மோடி தேவை என்ற பிம்பம் உருவாக்கப் பட்டது.
மோடிக்கு இணையான தலைவரை எதிர்க்கட்சிகள் அடையாளம் காட்டவில்லை. மோடிக்கு ராகுல் சமமா என்ற கேள்வியை யாரிடம் கேட்டாலும் இல்லை என்றே பதில் வரும்.
சரி. வந்து விட்டார் மோடி. புதிய இந்தியாவின் முடி சூடா மன்னராக. எல்லாரையும் அரவணைத்து செல்ல போவதாக அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.
வாழ்த்துவோம். காத்திருப்போம் என்ன செய்யப் போகிறார் என்பதைக் காண.
This website uses cookies.