மதம் என்றால் வெறி என்று ஒரு பொருள் தமிழில் உண்டு.
எல்லா மதங்களும் வெறியைத்தான் தூண்டுகின்றன. அப்படித்தான் அந்தந்த மதங்களை சேர்ந்த மனிதர்கள் நடந்து கொள்கிறார்கள்.
அநேகமாக உலகில் நடக்கும் பெரும்பான்மையான போர்கள் மதங்களை அடிப்படையாக கொண்டே நடக்கின்றன.
கடவுள் நம்பிக்கைக்கும் மதம் என்று சொல்லிக்கொள்வதற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.?
ஏசுவை நம்பு . அவர் போதனைகளை வாழ்க்கையில் கடைப்பிடி. யாரும் தடுக்க முடியாது. எந்த சட்டமும் தடுக்காது. பைபிள் உன் வாழ்க்கைக்கு துணையாக இருக்கட்டும். அதற்கு உன்னை நீ ஏன் கிறிஸ்தவன் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்? கிறிஸ்தவன் என்று சொல்லி கொள்ளாவிட்டால் நீ கிறிஸ்தவன் ஆக மாட்டாயா?
நீ அல்லாவை நம்பு. குரான் தந்திருக்கும் ஐம்பெரும் கட்டளைகளை தவறாமல் நிறைவேற்று. இறைவன் எவரையும் வெறுக்க கட்டளை இட்டிருக்க மாட்டார். அன்பையும் கருணையையும் வாழ்வில் கடைப்பிடிக்கும் எவரையும் அல்லா கைவிட மாட்டார். ஆனால் அதற்கு உன்னை நீ முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ள வேண்டுமா? முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளாமல் குரான் காட்டும் வழியில் பிறழாது வாழும் எந்த மனிதனை அல்லா ஏற்றுக் கொள்ள மறுப்பார்?
இந்து என்பது மதமே இல்லை. பின் ஏன் உன்னை இந்து என்று சொல்லி கொள்ள வேண்டும்? வேதம், அதை விளக்க வந்த ஸ்மிருதிகள் , புராணங்கள் என்று சமஸ்க்ரிதத்தில் இருக்கும் ஆயிரமாயிரம் கதைகள் நம்பிக்கைகள் ஆகட்டும் பிற மொழிகளில் வழங்கும் கடவுள் சம்பந்தமான ஆயிரமாயிரம் நம்பிக்கைகள் கதைகள் ஆகட்டும் எதிலாவது இந்து என்ற சொல் இடம் பெற்றிருக்கிறதா? நீ எந்தக் கடவுளை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் வணங்கு ,பிரார்த்தி , எந்த சடங்குகளை வேண்டுமானாலும் கடைப்பிடி எவர் உன்னை தடுக்க முடியும்? முஸ்லிம் கிறிஸ்தவன் அல்லாதவன் எல்லாம் இந்து என்று ஏன் கூட்டம் சேர்க்கிறாய்? மற்றவர்களோடு சண்டை போடவா?
கடவுள் பாவம் எல்லாவற்றையும் கடந்தவர். அவரா அவளா அதுவா என்பது கூட புதிர். கண்டவர் விண்டிலர் விண்டவர் கண்டிலர் என்பதுதானே உண்மை. எல்லா மதங்களின் அறிஞர்களையும் கூட்டி பல ஆண்டுகள் ஆராய்ச்சி நடத்தி எதிலும் முழு உண்மை இல்லை என்று கண்டறிந்து அறிவித்தாரா இல்லையா மாமன்னர் அக்பர். ?
எல்லா மதங்களும் ஒரே இறைவனையே இறுதியில் கொண்டு சேர்க்கின்றன என்பதை ஒப்புக் கொண்ட பின் ஏன் தங்கள் மதங்களில் ஆட்களை சேர்க்க அலைகிறீர்கள்?
யூதம், பௌத்தம் , சமணம் சீக்கியம் , இன்னும் சீனாவில் ஜப்பானில் ஆப்பிரிக்காவில் பின்பற்றப் படும் எல்லா மதங்களும் அநேகமாக ஒரே இறைவனையே அடைய வழி காட்டுகின்றன.
மதங்களை வைத்து பிழைப்பு நடத்துகிறவர்கள், மற்றவர்களை அடிமைகள் ஆக்கி அவர்களின் செல்வங்களை கொள்ளை அடிக்க நினைப்பவர்கள், வேலையே செய்யாமல் பிழைக்க நினைப்பவர்கள் , இவர்கள்தான் மக்களை மடையர்கள் ஆக்கி பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
பத்து கடவுள் வாழ்த்து பாடிய வள்ளுவர் எந்த கடவுளின் பெயரையும் சொல்ல வில்லை. ஏன் ராமனை கதாநாயகனாக வைத்து ராமாயணம் இயற்றிய கம்பர் கூட கடவுள் வாழ்த்தில் கடவுள் பெயரை குறிப்பிட வில்லை. தமிழன் கடவுளை நம்பினான். முன்னோர்களை மட்டுமே கடவுளின் வடிவமாக உருவகப் படுத்தி மரியாதை செலுத்தினான்.
கடவுள் மனிதனிடம் எதிர்பார்ப்பது எதையும் இல்லை. எதை செய்தால் கடவுள் மகிழ்வாரோ அதை செய்வது மட்டுமே மனிதர்களின் கடமை.
சட்டத்தால் மதங்களை தடை செய்ய முடியாது. மனிதர்களால் முடியும். உண்மையான கடவுள் நம்பிக்கை கொண்ட மனிதர்களால் மட்டுமே முடியும்.
அரசு , நிறுவனங்கள், உறவுகள் , என்று எதிலும் மதம் என்ன கேள்விக்கு மதத்தை சொல்லாமல் நான் தமிழன் நான் மலையாளி, நான் தெலுங்கன், நான் இந்திக்காரன், மராட்டியன் என்று மொழியை மட்டுமே யார் குறிப்பிடுகிறார்களோ அவர்கள் எந்த மதத்தையும் சாராதவர்கள் என்ற புது மரபு உருவாகட்டுமே!!!
தெளிவாக குறிப்பிட வேண்டும் என்றால் எந்த மதமும் இல்லை என்று குறிப்பிட ஒரு இடம் கொடுக்கட்டுமே? அவன் கடவுள் நம்பிக்கையாளன். ஆனால் மதத்தில் நம்பிக்கை இல்லாதவன் என்று பொருள் .
நாத்திகன் இல்லை என்பதையும் ஆனால் மதம் சாராதவன் என்பதையும் குறிக்கும் தகுந்த வேறு சொல் கிடைத்தால் அதையும் பயன் படுத்தலாம்.
எப்படியோ ,
மனிதர்களை மாய்க்கும் மதங்களை ஒதுக்குவோம்.
கடவுளைக் காப்போம்!!!
This website uses cookies.