சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது பாஜக உறுதி? கோட்சேவுக்கும் கொடுப்பார்களோ?

savarkar
savarkar

விநாயக் தாமோதர் சாவர்க்கர்!

இந்து மகாசபையின் பிதாமகர். 5 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்தவர். 1923லேயே இந்துத்வா என்ற தனது கொள்கை நூலை எழுதியவர்.

இந்து மகா சபையில் இருந்துதான் ஹெக்டேவார் விலகி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை தொடங்குகிறார். இந்து மகா சபைக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் உள்ள ஒரே வித்தியாசம் அவர்கள் ஆட்சி அதிகாரத்தை பிடிக்க இலக்கு வைத்தார்கள். ஆர்எஸ்எஸ் இயக்கம் அதிகாரத்தில் இல்லாமல் சமுதாய இயக்கமாக இயங்கி ஆட்சிக்கு வருபவர்களை தனது ஆளுகைக்குள் அடக்கி வைக்க இலக்கு வைத்தது. அவ்வளவுதான். இருவருக்கும் இடையே கொள்கை அளவில் பெருத்த வேறுபாடு இல்லை.

சாவர்க்கர் ஒன்றும் விடுதலை போராட்ட வீரர் இல்லை. பிரிட்டிஷ் அரசு அவரை  அந்தமான் சிறையில் வைத்தது விடுதலை போராட்டத்துக்காக அல்ல. ஆங்கில அரசுக்கு ஒத்துழைக்கவில்லை என்பதற்காகவும் நாட்டில் இந்து முஸ்லிம் குழப்பம் ஏற்படுத்துகிறார் என்பதற்காகவும்தான்.

வெள்ளையனே வெளியேறு என்ற குயிட் இந்தியா இயக்கம் அரசாங்க வேலையில் இருப்பவர்களை விலகி வரச்சொல்லி காங்கிரஸ் அழைப்பு விடுத்தபோது ஒரு இந்து மகா சபை உறுப்பினர் கூட வேலையை  விடக் கூடாது என்று உத்தரவு போட்டவர் சாவர்க்கர்.

காந்தி கொலையான நாளுக்கு முன்னர் கோட்சேவும் நாராயண் ஆப்தேவும் சாவர்க்கரிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றதாகவும் வெற்றியுடன் திரும்புங்கள் என்று சவர்க்கர் அவர்களை ஆசீர்வதித்து அனுப்பி வைத்ததாகவும் சில சாட்சிகள் கூறினார்கள். காந்தி கொலையானவுடன் 05/02/1948ல் சாவர்க்கர் கைது செய்யப்பட்டு குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப் பட்டார். விசாரணையில் ஊர்ஜிதப் படுத்தும் சாட்சி இல்லை கூறி விடுதலை செய்யப்பட்டார்.

ஆனால் காந்தி கொலை பற்றி  விசாரிக்க அமைக்கப்பட்ட ஜீவன் லால் கபூர் கமிஷன் தனது அறிக்கையில் சாவர்க்கரின் மேற்பார்வையில் தான் காந்தி கொலைக்கான திட்டங்கள் தீட்டப்பட்டன என்று கூறியது. ஆனால் அந்த அறிக்கை 1969ல் வெளியானபோது 1966 லேயே சவர்க்கர் இறந்திருந்தார்.

அதேபோல் பாரதிய ஜன சங்கத்தை தொடங்கிய டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியும் முன்னாள் இந்துமகா சபை உறுப்பினர்தான்.

ஆக ஆர்எஸ்எஸ் இன்றைய பாரதீய ஜனதா கட்சியாகிய முன்னாள் பாரதிய ஜன சங்கம் இரண்டையும் தொடங்கியவர்கள் முன்னாள் இந்து மகா சபை உறுப்பினர்களே.

இன்றளவும் காந்தி கொலை செய்யப்பட்ட ஜனவரி 30 தேதியை வீர நாள் ஆக (Bravery Day) கொண்டாட கோரிக்கை வைக்கிறது இந்துமகா சபை. அவரது சிலையை திறந்து வைக்க பிரதமர் மோடியை அழைக்கும் அளவுக்கு அவர்களுக்கு துணிச்சல் இருக்கிறது.

ஒருபுறம் காந்தியை தேசத்தின் தந்தை என்று அழைத்துக் கொண்டே அந்த தேசபிதாவை கொன்ற கோட்சேவையும் அவரின் குருவான சவர்க்கரையும் கொண்டாட முனையும் தந்திரம், துணிச்சல், வெட்கமின்மை பாஜகவுக்கு மட்டுமே உண்டு. கேட்டால் நாங்கள் எங்கே கோட்செவை கொண்டாடுகிறோம் அது  இந்துமகா சபை செய்யும் வேலை என்பார்கள்.      

காந்தியை கொன்ற கோட்சேவை கொண்டாடும் நாட்டில் கூண்டில் ஏற்றப்படப் போவது நீதியாகத்தான் இருக்கும்.