தேர்தல் ஆணையத்தின் இடைத்தேர்தல் நாடகம் முடிவுக்கு வந்தது??!!

election-thiruvarur
election-thiruvarur

திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28 ம் தேதி இடைதேர்தல் என்ற தனது அறிவிப்பை தேர்தல் ஆணையம் இன்று ரத்து செய்தது.

இதன் மூலம் இன்று உச்ச நீதிமன்றம் விசாரிக்க இருந்த அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப் படும் என்று தெரிகிறது.

டிசம்பர் மாதம் 3 ம் தேதியே இப்போது இடைதேர்தல் நடத்தும் சூழல் இல்லை என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் ஏன் அவசர அவசரமாக தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்தது என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை.

தேர்தல் ஆணையம் மத்திய பாஜக அரசின் அரசியல் விளையாட்டுகளுக்கு உடன் பட்டுசெயல்  படுகிறது என்ற குற்றச்சாட்டு இதன் மூலம் மேலும் வலுப்பெறுகிறது.

அதிமுக-வும் பாஜக வும் தனது வேட்பாளர்களை அறிவிக்காத போதே இந்த சந்தேகம் பலருக்கு இருந்தது.

ஏன் இந்த வீண் விளையாட்டு? கஜா புயல் நிவாரண பணிகள் நிறைவடையாத நிலையில் அதனால் அதிகம் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் தேர்தல் அறிவித்து எந்த அரசியல் கட்சி யாருடன் சேருகிறது என்றெல்லாம் ஆழம் பார்க்க தமிழக மக்கள் தானா கிடைத்தார்கள்?

இன்றைய நிலையில் ஏப்ரல் மாதம் பாராளுமன்ற தேர்தல் நடத்தியாக வேண்டிய சூழலில் தேர்தல் ஆணையம் இருக்கிறது. இடையில் பிப்ருவரி மாதம் நடத்துவேன் என்று மீண்டும் விளையாட்டு காட்டாமல் பாராளுமன்ற தேர்தலோடு காலியாக இருக்கும் இருபது தொகுதிகளுக்கும் சேர்த்து தேர்தலை நடத்துவதே ஒரே தீர்வாக இருக்கும். இதைத்தான் எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.

இடையில் இடைத்தேர்தல் நாடகம் ஆடியதன் மூலம் தனது மதிப்பையும் நம்பிக்கைத் தன்மையையும் இழந்து நிற்கிறது தேர்தல் ஆணையம் என்பதே பொதுமக்கள் கருத்து.

அதுவும் நன்மைக்கே. பாஜக வின் உண்மை சொரூபம் மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டிருப்பது நல்லதுதானே.