இந்திய அரசியல்

எதிர்க்கட்சிகளை மிரட்ட இனி சிபிஐ உதவாது?! ஆந்திர, மே.வங்க அரசுகள் முடிவால் அதிர்ச்சி?! வாழ்க மாநில சுயாட்சி!!

Share

சிபிஐ என்ற விசாரணை அமைப்பு டெல்லி சிறப்பு காவல் துறை சட்டம்  1946 ல் உருவாகப்பட்டது.

அது அந்த யூனியன் பிரதேச எல்லைக்குள் தான் அதிகார வரம்பு படைத்தது. மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்கள் அதிகாரங்கள் வழங்கினால் மட்டுமே சிபிஐ விசாரிக்க முடியும்.

ஆனால் இதுநாள் வரை எல்லா மாநிலங்களிலும் அந்த ஒப்புதலை பெற்றுத்தான் சிபிஐ  தன் அதிகார வரம்பை இந்தியா முழுமைக்கும் விரிவு படுத்தியுள்ளது.

மத்திய அரசு சிபிஐ அமைப்பை தன் கைப்பாவையாக பயன்படுத்தி தன் அரசியல் எதிரிகளை பந்தாடவும் மிரட்டவும் பயன் படுத்தி  வந்தது.

இந்த நிலையில் தான் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சிபிஐ அமைப்பிற்கு கொடுத்திருந்த தடையில்லா ஒப்புதலை திரும்ப பெற்றிருக்கிறார். அதாவது இனி சிபிஐ ஆந்திராவில் விசாரணை செய்யவேண்டுமென்றால் ஒன்று மாநில அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும் அல்லது உயர் நீதி மன்றமோ அல்லது உச்ச நீதிமன்றமோ உத்தரவிடவேண்டும்.

தானாக முன்வந்து யார் மீதுவேண்டுமானாலும் வழக்கு போடும் வேலையை இனி  சிபிஐ செய்ய முடியாது.

சிபிஐ அமைப்பிற்குள் நடக்கும் பதவி சண்டை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டு வருகிறது. இயக்குனரும் துணை இயக்கனரும் ஒருவருக்கொருவர் கோடிகளில் லஞ்சம் வாங்கி விட்டார்கள் என்று குற்றம் சுமத்திக் கொள்கிறார்கள்.

இதில் மத்திய அரசு பஞ்சாயத்து செய்ய முயற்சித்தும் பலன் இல்லை. உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது சிபிஐ இன் யோக்கியதை.

முதலில் உங்கள் பிரச்னையை தீர்த்துக்  கொண்டு வாருங்கள் பிறகு  மற்ற மாநிலங்களை பார்க்கலாம் என்று சொல்லி விட்டார் நாயுடு. அவரைப் பின்பற்றி மமதா பானர்ஜியும் மே வங்க மாநிலத்திலும் கொடுக்கப்பட்டிருந்த பொது அனுமதியை திரும்ப பெற்றுக்  கொண்டு  விட்டார். சிபிஐ தன் நம்பிக்கைத் தன்மையை இழந்துவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நடப்பில் இருக்கும் விசாரணைகள் மட்டும் தொடரலாம்.

இரு மாநிலங்களும் ஊழல் வழக்குகளுக்கு பயந்து சிபிஐ-யை தடுக்கிறார்கள் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டுகிறார். தெலுகு தேச முக்கியப் புள்ளிகள் மீது சிபிஐ, வருமான வரித்துறை, அமலாக்கப்பிரிவு மூன்றும் விசாரணைத் தாக்குதல் தொடங்க இருப்பதை தெலுகு தேசம் மோப்பம் பிடித்திருக்கலாம். மோடி  மட்டும் அரசியல் செய்யலாமோ ?

ஏற்கெனெவே 1998-ல் கர்நாடக முதல்வர் ஜெ எச் பாட்டில் சிபிஐ க்கு கொடுத்திருந்த அனுமதியை ரத்து  செய்திருக்கிறார். அது இன்றளவும் தொடர்கிறது.

ஆந்திர அரசின் முடிவைப் பொறுத்த வரையில் அது சிபிஐ மட்டுமல்ல பிற துறைகள் தொடர்பாகவும் நடக்கும் விசாரணைகளையும் பாதிக்கும் எனத் தெரிகிறது. அதாவது ஆட்கடத்தல், ஆயுதங்கள், அணுசக்தி, கலைப்பொருட்கள், கலால், பினாமி செயல்பாடுகள், நிறுவனங்கள், காப்பீடு, போன்ற பல துறைகளிலும் எந்த மத்திய அமைப்பும் மாநில அரசின் ஒப்புதல் இன்றி நடவடிக்கை எடுக்க முடியாது.

சரியான சட்ட ஆலோசனை பெற்ற பிறகே இந்த முடிவை நாயுடு எடுத்துள்ளார்.

வேறொரு கோணத்தில் இந்த முடிவு முக்கியத்துவம் பெறுகிறது.

திமுக-வின் கொள்கை மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி.

அது அகில இந்தியாவுக்கும் பரவும் நல்ல நேரமாக இது இருக்கிறது.

மத்திய அரசில் குவிந்து கிடக்கும் அதிகாரங்கள் இது ஜனநாயக நாடுதானா என்ற ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

மத்திய மாநில அதிகாரப் பங்கீடுகள் இங்கே சரிவர வரையறை செய்யப்படவில்லை.

வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் மாநில அரசின் அதிகாரங்களை பிடிங்கி தன் வசம் வைக்கவே மத்திய அரசு விரும்புகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தொடங்கப் படும் ஒரு மாநில சுயாட்சி இயக்கமாகவே நாம் ஆந்திர, மே வங்க அரசுகளின் நடவடிக்கைகளை நாம்  பார்க்கிறோம்.

மாநிலங்கள் இது போன்று சுயாட்சித் தன்மையுடன் இயங்கும் ஒரு அமைப்பை செயல் படுத்த முடியுமா ?  ஒரு மாநில  தேர்தல் கமிஷனை கூட சுயாட்சி பெற்ற அமைப்பாக செயல் படுத்த நம்மால் முடியவில்லையே? உண்மைதான். ஆனால் முயற்சியை விட்டு  விட முடியுமா?

மற்ற மாநிலங்களும் இந்தப் போக்கைத் தொடர வேண்டும்.

வெல்க மாநில சுயாட்சி கோரிக்கைகள்!!!

This website uses cookies.