சாரதா – பொன்சி நிதி நிறுவன ஊழல் வழக்கு 2013 ல் தொடங்கியது.
2014ல் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலில் விசாரணை நடந்து வருகிறது. மமதா கட்சியை சேர்ந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டார்கள். அப்போதெல்லாம் மமதா பிரச்னை செய்ய வில்லை.
ஆனால் கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமாரை கைது செய்ய சிபிஐ முயற்சித்த போதுதான் மமதா எதிர்த்தார். தர்ணா செய்தார். அகில இந்திய எதிர்கட்சிகள் ஆதரவு அளித்தன.
தேர்தல் நெருங்கும் நேரத்தில் மமதா கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் சிபிஐ செயல்படுவதாக மமதா குற்றம் சுமத்துகிறார்.
பிரச்னை குற்றவாளிகள் மீது நடவடிக்கை வேண்டுமா வேண்டாமா என்பதல்ல .
பிரச்னை சிபிஐ அமைப்பிற்கு இருக்கும் அதிகாரம் பற்றியது.
சிபிஐ டெல்லி காவல் துறை சட்டத்தின் படி அமைக்கப்பட்டது. மாநிலங்கள் சம்மதம் தெரிவித்தால் மட்டுமே அங்கு சிபிஐ நுழைய முடியும். அந்த அதிகாரத்தை ஆந்திராவும் மேற்கு வங்கமும் திரும்ப பெற்றுக் கொண்டன. பழைய வழக்கு என்பதால் சிபிஐ விசாரணை அங்கு நீடிக்கும்.
சிபிஐ மதிப்பிழந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன.
அலோக் வர்மாவும் ராகேஷ் அஸ்தானாவும் என்றைக்கு பரஸ்பரம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டிக்கொண்டார்களோ அன்றைக்கே சிபிஐ-ன் மானம் கப்பல் ஏறி விட்டது.
குற்றச்சாட்டு ஒன்று உண்மையாக இருக்க வேண்டும். அல்லது பொய்யாக இருக்க வேண்டும். உண்மையாக இருந்தால் லஞ்சம் வாங்கியவர் தண்டிக்கப் படவேண்டும். பொய்யாக இருந்தால் ஆதாரமில்லாமல் பொய் குற்றம் சாட்டியவர் தண்டிக்கப்பட வேண்டும். இரண்டுமே நடக்க வில்லையே? இனி யார் சிபிஐ-ஐ நம்புவார்கள்?
எப்படியோ பிரச்னை உச்ச நீதிமன்றம் சென்ற போது சிபிஐ விசாரணைக்கு கமிஷனர் ராஜீவ் குமார் ஆஜராக வேண்டும் என்றும் அதுவரை கைது செய்யக் கூடாது என்றும் உத்தரவிட்டு பிரச்னையை தற்காலிகமாக தீர்த்து வைத்திருக்கிறது.
சிபிஐ-ன் கமிஷனரை கைது செய்து மமதாவிற்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் திட்டம் தோல்வியடைந்தது.
தமிழ்நாட்டில் டிஜிபி ராஜேந்திரன் இல்லத்தில் சோதனை நடந்தது. எடப்பாடி வாய் திறக்க வில்லை.
அந்த வகையில் மாநில உரிமையை மேற்கு வங்கம் பாதுகாத்தது பாராட்டத் தக்கது.
சிபிஐ சும்மாயிருக்காது என்பது நமக்கு தெரியும். இப்போதே ராஜீவ் குமார் மேல் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மேற்கு வங்க தலைமை செயலருக்கு உள் துறை அறிவிப்பு அனுப்பியிருக்கிறது.
அதிகாரம் இருக்கும் வரை அவர்கள் அரசியல் செய்யப் போவதை நிறுத்தப் போவதில்லை.
பாஜக, சிபிஐ அமைப்பை பயன்படுத்தி எடுக்கும் அரசியல் நடவடிக்கைகள் அதற்கு ஒருபோதும் உதவப் போவதில்லை.
This website uses cookies.