ராகுல் காந்தி வெளியிட்ட தேர்தல் அறிக்கை நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி அதிர்ச்சி கொடுத்து திக்கு முக்காட வைத்து விட்டது.
காங்கிரஸ் அறிக்கையா இது என்று சிலரால் நம்பவே முடியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அபாயகரமானது. செயல்முறைப்படுத்த முடியாதது. அதன் நோக்கம் நாட்டை துண்டாடுவதுதான் என்று நிதி அமைச்சர் அருண் ஜெட்லி விமர்சித்து இருப்பதில் இருந்தே பாஜக எவ்வளவு தூரம் கலங்கி நிற்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த தேர்தல் அறிக்கையால் காங்கிரஸ் பெற இருக்கும் நம்பிக்கைத் தன்மையை பாஜக வால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆங்கிலேயர் காலத்து தேசத்துரோக குற்றம் சட்டப் பிரிவு 124 A இன்னமும் நீடிப்பது கேவலம். அதை நீக்குவோம் என்று காங்கிரஸ் சொல்கிறது. ராணுவத்துக்கு அளித்து இருக்கும் சிறப்பு அதிகார சட்டத்தை திரும்ப பெறுவோம் என்கிறது. இனி மலைவாழ் மக்கள் காட்டில் இருந்து வெளியேற்றப்பட மாட்டார்கள் என்கிறது. நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 6% த்தை கல்விக்கு ஒதுக்குவோம் என்றும் 3% த்தை மருத்துவ பணிக்கு ஒதுக்குவோம் என்றும் உறுதி அளிக்கிறது.
மீனவர் நலன் காக்க தனி அமைச்சகம். புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து, ரபெல் ஊழல் விசாரணை, சரக்கு சேவை வரியை மறுபரிசீலனை, விவசாயத்துக்கு தனி பட்ஜெட், மீண்டும் திட்டக் கமிஷன், பெட்ரோல் டீசல் ஜி எஸ் டி வரம்புக்குள், பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, நியாய் என்னும் குறைந்த பட்ச வருவாய் உறுதி திட்டத்தில் ஏழைகளுக்கு ஆண்டுக்கு அவர்கள் வங்கிக் கணக்கில் ரூபாய் 72,000/-, எல்லாவற்றுக்கும் மேலாக கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றுவதுடன் நீட் தேர்வு ரத்தை மாநிலங்களிடம் விட்டு விடுவது என்று இந்திய மக்கள் எதிர்பாராத பல திட்டங்களை காங்கிரஸ் அறிவித்திருப்பது உண்மையிலியே ஒரு திருப்பு முனைதான் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.
அதனால் தான் பாஜக அஞ்சுகிறது.
குறிப்பாக திமுக தனது தேர்தல் அற்க்கையில் குறிப்பிட்டிருந்த பல அம்சங்களை காங்கிரஸ் ஏற்றுக் கொண்டு சேர்த்திருப்பது மிகவும் வரவேற்கத் தக்கது.
மாநிலங்களின் அதிகாரங்களை சிறிது சிறிதாக குறைத்து அவைகளை உள்ளாட்சி அமைப்புகளாக மாற்றும் வேலையில் இறங்கி இருந்த பாஜக விற்கு இது பெருத்த ஏமாற்றம்தான். ஏனென்றால் காங்கிரஸ் அறிக்கை உருப்பெற்றால் மாநிலங்கள் சுயமாக சிந்தித்து முன்னேற முடியும்.
மாநிலங்களில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பதே இந்திய ஒற்றுமையை கட்டிக் காக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்திருக்கிறது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை.