இந்திய அரசியல்

தன் பாலின உறவு குற்றமல்ல ; உச்சநீதி மன்றம் வரலாற்றைத் திருத்தியது !!!

Share

இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 377
இயற்கைக்கு முரணாக ஆணுடனோ பெண்ணுடனோ மிருகத்துடனோ
பாலுறவு கொண்டால் பத்து ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கொடுக்க வழி செய்கிறது.
இதற்கு எதிராக உலகளாவிய அளவில் எல் ஜி பி டி என்று சொல்லக்கூடிய
lesbian பெண்ணோடு பெண்
gay ஆணோடு ஆண்
bisexual இரு தரப்பு உறவு
transgender பாலின மாற்றியோர் ஆகிய
சமுதாயத்தினர் தங்கள் பாலின வாழ்க்கை தனிப்பட்ட உரிமை சம்பந்தப் பட்டது என்றும் அதற்கு வேறு யாரும் ஆட்சேபிக்க முடியாது என்றும் எனவே அதற்கான
சட்ட பாதுகாப்பு வேண்டும் எனவும் போராடி வந்தனர்.

அவர்களின் கோரிக்கையில் இருந்த நியாயத்தை ஏற்றுக்கொண்டு
ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, பெல்ஜியம் கனடா , கொலம்பியா, இங்கிலாந்து ,
பின்லாந்து ,பிரான்ஸ்,ஜெர்மனி,நார்வே,போர்ச்சுகல்,ஸ்காட்லாந்து,
தென் ஆப்ரிக்கா ,ஸ்பெயின,அமேரிக்கா,ஸ்வீடன்
உள்ளிட்ட 24 நாடுகளுக்கும் மேல்
இவர்கள் திருமணமே செய்து கொள்ள அனுமதித்து விட்டன.

இன்னும் 74 நாடுகளில் தன் பாலின உறவு குற்றம்தான்
குறிப்பாக இஸ்லாமும் கிறித்தவமும் தன்பாலின உறவை ஏற்கவில்லை
13 இஸ்லாமிய நாடுகளில் அது மரண தண்டனைக்கு உரிய குற்றம்
இவை எல்லாவற்றையும் மீறி தனி மனித உரிமை தான் இப்போது பிரச்னை
என் படுக்கை அறைக்குள் நானும் விரும்புகிற ஆணோ பெண்ணோ
எப்படி வாழ்ந்தாலும் மற்றவர்களுக்கு அதை ஆட்சேபிக்க உரிமையில்லை
இதுதான் இன்று உச்ச நீதிமன்றம் தந்திருக்கும் ஆணை
அரசியல் சாசன அமர்வின் ஐந்து நீதிபதிகளும்
ஒருமித்த தீர்ப்பினை வழங்கி வரலாற்றையே மாற்றியிருகிறார்கள்
இந்த தீர்ப்பும் சாதாரணமாக வரவில்லை.

இதே உச்சநீதிமன்றம் தன் பாலின உறவு குற்றம் என்றது
குற்றமில்லை என்ற உயர்நீதி மன்ற தீர்ப்பை மாற்றியது
பின்னால் 2017 ல் உச்ச நீதி மன்றம் 9 நீதிபதிகள் கொண்ட
அரசியல் சாசன அமர்வில் தனி நபரின் அடிப்படை உரிமை
பாதுகாக்கப் படவேண்டும் என்ற தீர்ப்பின் அடிப்படையில்
இந்த ஐந்து நீதிபதிகள் அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி
வரலாற்றை மாற்றியிருகிறது.

பாராளுமன்றம் இதை பரிசீலிக்கட்டும் என்ற வாதத்தையும் அது ஏற்கவில்லை
சட்டம் இயற்றப் பட்டால் கூட அதையும் உச்சநீதி மன்றம் பரிசீலிக்குமே
தீபக் மிஸ்ரா, நாரிமன், கன்வில்கர், சந்திரசூட் ,இந்து மல்ஹோத்ரா
ஆகிய ஐவரும் போற்றப் படுவார்கள்.
தீர்ப்பில் முக்கியமாக, தன் பாலின உறவு
குற்றமல்ல ( not immoral ) என்றும்
கட்டுப்பாடு அவர்களை விலங்கிடுவதற்கு சமம் என்றும்
இதுவரை ஒடுக்கி வைத்ததற்கு சமுதாயம் மன்னிப்பு கோரவேண்டும் என்றும்
தடை அறிவுக்கு பொருந்தாதது ,தான்தோன்றித்தனமானது ,
புரிந்து கொள்ள முடியாதது என்றும் கடுமையான
வார்த்தைகளால் சாடியிருக்கிறது.

அதே நேரத்தில் அந்தப் பிரிவில் மிருகங்களுடன் உறவு கொள்வது
தண்டிக்கப்படும் குற்றமாக நீடிக்கும் என்றும் தெளிவு படுத்தியிருக்கிறது .
அவர்களையும் மனிதர்களாக மதிக்க வேண்டும் என்ற அளவில்
இந்த தீர்ப்பு போற்றப் பட வேண்டியதே
திருநங்கைகளாய் பிறந்தோர் என்ன குற்றம் செய்தார்கள் ?
அவர்களை ஒதுக்கி வைப்பதோ இழிவு படுத்துவதோ என்ன நியாயம்?
முன்னேறிய நாடுகள் எல்லாம் எடுத்த முடிவுகள்
மற்றவர்களுக்கு முன் உதாரணம்தான்
மனிதம் காப்போம் மதிப்போம் என்பதே தீர்ப்பு.

This website uses cookies.