டெல்லி அரசு தொடுத்த மேன்முறைஈட்டில் உச்சநீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு அளித்தது.
டெல்லி உயர் நீதி மன்றம் துணை நிலை ஆளுநர் தான் அதிகார தலைவர் என்று தீர்ப்பு அளித்தது வரலாற்றுப் பிழை. அதை எதிர்த்துத்தான் டெல்லி அரசு மேன்முறையீடு செய்தது.
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுக்கு எந்த வகையிலும் ஆளுநர் இடையூறு செய்யக் கூடாது.
மத்திய அரசு ஆளுநர்களை வைத்துக் கொண்டு மறைமுகமாக தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளை மிரட்டுவது என்ற போக்கு இனி நீடிக்காது.
மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட முதல்வர் கேஜ்ரிவால் ஆளுனரை சந்திக்க முடியாமல் அவரது அலுவலகத்திலேயே தர்ணா செய்தார்.
எத்தனை ஊடகங்கள் இதனை பெரிது படுத்தின. ?
எட்டு நாட்கள் ஒரு முதல் அமைச்சர் ஒரு ஆளுனரை சந்தித்து முறையிட வாய்ப்புக் கிடைக்காமல் அங்கேயே தர்ணா செய்ய வேண்டிய அவலம் நடந்ததே?
நீதிமன்றம் ஏன் அங்கே தர்ணா செய்ய வேண்டும் என்று கேட்டது வேறு விடயம்.. வேறு வழி தெரியாமல் தர்ணா செய்தார்கள்.
வீடு தோறும் மளிகை பொருட்களை அரசே கொண்டு சேர்க்கும் திட்டம் அமுல்படுத்தப் பட ஏன் வேண்டும் ஆளுநர் அனுமதி?
தோற்றுப் போன அரசியல் வாதிகளின் கடைசிப் புகலிடம் ஆளுநர் மாளிகைகள் ஆகிவிட்டன என்பது உண்மைதானே?
ஆள முடியாத இடங்களில் ஆளுநர் மூலமாக காலூன்ற முடியாதா என்று மத்திய ஆளும் கட்சி திட்டம் இடுவது என்ன நியாயம்?
புதுவையில் கிரண் பேடி செய்வதும் டெல்லியில் துணை நிலை ஆளுநர் செய்வதும் ஏறத்தாழ ஒன்றுதான்.
தமிழகத்தில் வந்திருக்கும் புரோஹித் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
நிர்மலாதேவி விவகாரத்தை விட்டு விடுவோம்.
மாவட்டம் தோறும் ஆய்வு செய்ய போகிறேன் என்று புது விதியை உருவாக்க திட்டமிடும் இவருக்கு யார் பின்னால் இருக்கிறார்கள்? மத்திய அரசு இருக்கிறது.
நிலம் , காவல் , சட்ட ஒழுங்கு மூன்றைதவிர வேறு எதிலும் ஆளுநர் தலையிடக் கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பின் முக்கிய அம்சம்கள் இவைதான்;
‘ஆளுநர் ஒரு தடுப்பு சக்தியாக செயல் படக் கூடாது . ‘
‘ ஏதாவது மாற்றுக் கருத்து வந்தால் விவாதிக்கலாமே தவிர தடை செய்யக் கூடாது. ‘
‘ அரசு ஆளுநருக்கு தன் முடிவுகளை தெரிவிக்க வேண்டும். அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ‘
‘ மாற்றுக் கருத்து இருந்தால் ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி விளக்கம் கேட்கலாம். ‘
இந்த தீர்ப்பு இனிமேலாவது மத்திய அரசுக்கு ஆளுநர்களை வைத்து அரசியல் செய்யக் கூடாது என்ற படிப்பினையை கொடுக்குமா?
ஏற்கெனவே பல தீர்ப்புகளில் உச்ச நீதிமன்றம் ஆளுனர்களின் அதிகார வரம்புகள் குறித்து வரையறை செய்திருக்கின்றன.
ஆட்சியில் இருப்போர் அவைகளை திருத்த முயற்சிப்பதுதான் வேதனை.
மோடி அரசு திருந்தும் என்று எதிர்பார்ப்பதும் நாய் வாலை நிமிர்த்த முடியும் என எதிர்பார்ப்பதும் ஒன்றுதான்.
அதன் அதன் இயல்புகளை திருத்த முடியாதுதானே!
மோடி அரசு தெரியாமல் தவறு செய்தால் திருத்திக் கொள்ளும். அவர்கள் செய்வது எல்லாமே தெரிந்தே செய்பவைகள். எப்படி திருத்திக் கொள்வார்கள்?
மக்கள் விழிப்புணர்வு ஒன்று மட்டுமே மக்களாட்சி தத்துவத்தை உயிர்ப்போடு வைத்திருக்கும்.