இந்திய அரசியல்

அச்சமூட்டும் மோடியின் அடுத்த ஐந்து ஆண்டுகள்? குடியரசுத் தலைவர் உரையே சான்று!!

Share

சொல்வது ஒன்று செய்வது வேறு என்பதுவே மோடியின் தாரக மந்திரம். 

கடந்த ஐந்து ஆண்டுகளிலும் மோடி இதைத்தான் செய்தார்.

வெளிநாடுகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை வெளிக்கொணருவேன் என்பதுதான் மோடியின் தொடக்க உறுதிமொழி.

எல்லாருக்கும் பதினைந்து லட்சம் தருவேன் என்பதை மறந்து விடுவோம். என்ன ஆயிற்று அந்த முயற்சி என்பதை யாவது பொறுப்புடன் சொன்னாரா? கடைசி வரையில் தனது சாதனை பட்டியலில் அதை சொல்லவே இல்லையே?

இந்த ஆண்டு மட்டும் காஷ்மீரில் நமது ராணுவ வீரர்கள் 74 பேர் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். நம்மால் தடுக்க முடியவில்லையே?

விவசாயிகளுக்கும் சிறு வியாபாரிகளுக்கும் பென்ஷன் திட்டத்தை அமுல்படுத்துவோம் என்கிறார் மோடி. முழுமையாக முடியுமா?

ஜிஎஸ்டி கொண்டு வந்து சிறு வியாபாரிகளை ஒழித்து விட்டு அவர்களுக்கு பென்ஷன் என்பது நல்ல திட்டமாம்.

அதேபோல் விவசாயிகளுக்கு 2022-க்குள் விளைபொருட்களுக்கு இரட்டிப்பு விலை என்பது கனவாகவே போய்விடும் போல் இருக்கிறது. பாசனத்திற்கு தண்ணீர் தராமல் எப்படி விவசாயம் செய்வார்கள்?

வேளாண் பொருளாதார வளர்ச்சி ஆண்டிற்கு 10.5% இருந்தால்தான் அது சாத்தியம் . இப்போது இருக்கும் வெறும் 2.9% வளர்ச்சியை கொண்டு அதை எப்படி சாதிப்பீர்கள் என்ற கேள்விக்கு பதில் இல்லை.

2030 ஆண்டில் நாட்டின் 40% மக்களுக்கு குடி தண்ணீரே இருக்காது என்று நிதி ஆயாக் சொல்கிறது. 21 பெருநகரங்களும் குடி தண்ணீர் இல்லாமல் போகும் என்று வேறு பயமுறுத்துகிறது. என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் அச்சத்தைப் போக்க?

அதேபோல் புதிய கல்வித் திட்டம் என்பது வேறு உள்நோக்கத்தோடு கொண்டுவரப்பட்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டிற்கும் உரிய பதில் இல்லை.    கல்விக்கு வெறும் 4.3% பட்ஜெட்டில் நிதி ஒதுக்குபவர்களால் எதையும் சாதிக்க முடியாது.

இந்தியாவில் எல்லா அரசியல் கட்சிகளையும் செயலற்றதாக்கி விட்டு அல்லது தனது ஆதரவு கட்சிகளாக மாற்றி விட்டு சீனாவில் எப்படி கம்யுனிஸ்டு கட்சி மட்டுமே இருக்கிறதோ அப்படி இதியாவில் பாஜக மட்டுமே கட்சி என்ற நிலையை உருவாக்குவதே மோடியின் லட்சியமாக இருக்குமோ என்ற அச்சம் எல்லாருக்கும் வந்து விட்டது.

நேற்று சந்திரபாபு நாயுடுவின் தளபதிகளாக இருந்த ராஜ்ய சபா உறுப்பினர்கள்  நான்கு பேரை சத்தமில்லாமல் பாஜக தனக்குள் இணைத்துக் கொண்டது. இது பலருக்கும் விடப்பட்டிருக்கும் சமிக்ஞை. யார் வந்தாலும் காப்பாற்றப்படுவீர்கள் என்பதே அந்த சமிக்ஞை.

கோவாவிலும் வட கிழக்கு மாநிலங்கள் பலவற்றிலும் பாஜக செயல்படுத்திய கட்சி தாவல்களை நினைத்துப் பார்த்தால் இவர்களிடம் ஜனநாயகம் என்ன பாடு படப் போகிறதோ என்ற அச்சம் தான் எழுகிறது.

தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் விவசாயத்தை அழித்து விடும் என்றாலும் மத்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது நிறைவேற்றுவதில்.

பெருமுதலாளிகள்பாடு தான் கொண்டாட்டமாக இருக்கும்.

இன்னும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் மோடி இந்தியாவை ஒரு வழியாக்கி விடுவார் என்ற அச்சத்தில் முகாந்திரம் இருக்கிறதா இல்லையா?   

அச்சத்தை போக்க ஏதாவது செய்யட்டுமே?!!வரவேற்போம்??!

This website uses cookies.