விநாயகர் வழிபாட்டுக்கும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கும்
பெருத்த வேறுபாடு உண்டு.
வரும் 13 ம் தேதி விநாயகர் சதுர்த்தி .
நம்பிக்கையாளர்களுக்கு வாழ்த்துக்கள்.
விநாயகர் நம்பிக்கை வேறு. அது தமிழர்களுக்கு உரியதா என்பதெல்லாம் இருக்கட்டும்.
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறவர் பிள்ளையார் .
புராண கதைகள் பற்றி விவாதிப்பதோ விமர்சிப்பதோ
நமக்கு இப்போது தேவையில்லை. நேரமுமில்லை.
எல்லா தெய்வங்களையும் ஒன்றெனக் கருதும் தமிழர்
இதையும் ஒன்றாக பாவித்துக் கொள்வதில் ஒன்றும் பிரச்னை இல்லை
அனைத்து தெய்வங்களுமாக இருந்து அருள்புரியும் ஓரிறை
அதில் பிள்ளையாரும் ஒருவர். அவ்வளவுதான்.
ஆனால் விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்கள் தமிழ்நாட்டில் எப்போது வந்தன . ?
சுதந்திர போராட்ட காலத்தில் பால கங்காதர திலகர்
இந்துக்களை ஒன்று திரட்டி போரட்டத்திற்கு வலு சேர்க்க முயன்றார்.
அதன் விளைவாக மும்பையில் தோன்றிய இந்த ஊர்வலங்களை
ஆர் எஸ் எஸ் தனதாக்கிக் கொண்டு இன்று நாடு முழுதும்
இந்துக்களை ஒன்றிணைத்து ஒரு சக்தியாக்கிட பயன்படுத்தி வருகிறது.
பின்னணியில் இந்து முன்னணி விஸ்வ இந்து பரிஷத் பா ஜ க என்ற பல
பெயர்களில் பார்ப்பனர்கள் தூண்டு கோலாய் இருந்து
செயல்பட வைக்கிறார்கள். அவர்கள் இல்லையென்றால்
இந்த விழா இல்லை ஊர்வலங்கள் இல்லை.
இதனால் பல நன்மைகளும் தீமைகளும் உண்டாயின.
நன்மை என்றால்
பலருக்கு வாழ்வளித்து வருகிறது.
சிலை உருவாக்குவதில் தொடங்கி அதை பராமரித்து
கரைக்கும் வரை பலருக்கும் அதில் பங்கிருக்கிறது.
எல்லா சாதி மக்களையும் பங்கேற்க வைக்க முடிகிறது. அதுவரை எந்த தொடர்பும் இல்லாமல் இருந்தவர்கள்
இந்த நிகழ்ச்சிகள் மூலமாக சங்கமிக்கிறார்கள்
நேரடியாக சாமிக்கு வைவேத்யம் தீப தூபம் காட்ட முடிகிறது.
அதாவது பார்ப்பன அர்ச்சகர் கிடைக்காத இடங்களில்.
எங்களுக்கு ஒரு திருவிழா இருக்கிறது என்று மாற்று
மதத்தவர் மத்தியில் சொல்லிக் கொள்ள முடிகிறது.
இந்துக்கள் ஒன்றாகத்தான் வலுவாகத்தான் இருக்கிறார்கள்
என்று மாற்று மதத்தவர்களுக்கு தரும் செய்தியாக இருக்கிறது.
பலர் தங்களுக்கு இந்த மதத்தில் இருந்து கொண்டு ஏதோ தொண்டு
செய்ய கொடுக்கப் பட்ட வாய்ப்பாக இதை வரவேற்கிறார்கள்.
சமயத் தொண்டு செய்த ஒரு திருப்தி பலருக்கு.
தீமை என்றால் சிலை செய்வதில் ரசாயன கலப்பு செய்து
அதை நீர்நிலைகளில் கரைக்கும் போது பெருத்த
தீமைகளுக்கு அடி கோலுகிறது.
வேண்டும் என்றே முஸ்லிம் பள்ளிவாசல்கள் வழியாக
செல்வோம் என்று பிடிவாதம் பிடித்து தீராத பகையை உருவாக்குகிறார்கள்.
பல இடங்களில் இந்துக்கள் என்போர் இடையே கூட பல
கும்பல்கள் தோன்றி வன்முறைக்கு வித்திடும் சம்பவங்கள் தொடர்கின்றன.
காவல் துறைக்கு மாளாத துன்பங்களை உருவாக்குகின்றன.
பக்தி என்றால் அவரவர் வீடுகளில் வணங்குவதே
தெரு விநாயகர் வழிபாடு வலு காட்டுவதற்கே
அதிலும் ஊர்வலங்கள் பிறரை எச்சரிப்பதற்கே
எல்லாவற்றையும் விட முக்கியம்
பார்ப்பனீயத்திடம் அடங்கிப் போவது உறுதிபடுத்தப் படுகிறது
இதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்
விநாயகர் என்ற பிள்ளையார் வழிபாடு வீட்டில் அல்லது ஆலயத்தில்
தருவது பக்தர்களுக்கு ஆத்ம திருப்தி
அதே பிள்ளையாரை தெருத் தெருவாக ஊர்வலமாக
அழைத்துச் சென்று பரப்புவது தமிழர் கலாச்சாரமல்ல.
விவாதிக்கட்டுமே தமிழ்ச்சமூகம்.