18 எம் எல் ஏக்கள் தகுதியிழப்பு வழக்கில் தாமதத்தால் அநீதி இழைத்திருக்கின்றன நீதி மன்றங்கள்.
எது சரி எது தவறு என்ற வாதம் தாண்டி இந்த தாமதத்திற்கு என்ன விளக்கம் கூறப் போகின்றன நீதிமன்றங்கள்.
ஆயுளே ஐந்து வருடங்கள். அதில் வழக்கில் ஒரு வருடம் போனால் மக்கள் தீர்ப்புக்கு என்ன மதிப்பு? ஐம்பது லட்சம் மக்களின் பிரதிநிதிகள் செயல் பட விடாமல் தடுக்கப் பட்டிருக்கின்றனர்.
தகுதி இழப்பு செல்லும் என்று தலைமை நீதிபதியும் செல்லாது என்று இன்னொரு நீதிபதியும் தீர்ப்பு அளித்து இருப்பதால் மூன்றாவது நீதிபதி தீர்ப்பு சொல்ல இன்னும் நான்கு மாதமாகலாம். அதன் மீது உச்ச நீதி மன்றம் சென்று எப்போது தீர்ப்பு வருமோ தெரியாது.
தீர்வைப் பெற தீர்ப்புகள் உதவாது என்பதுதான் நீதி போலிருக்கிறது.
நீதிமன்றங்கள் சுய பரிசீலனை செய்ய வேண்டும். மனசாட்சிப் படி தீர்ப்பு சொன்னால் மட்டும் போதாது. அப்படித்தான் தீர்ப்பும் இருக்கிறது என்று மக்களும் நம்ப வேண்டும்.
தீர்ப்பு சொல்ல ஐந்தறைமாதங்கள் எடுத்துக் கொண்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும் ?
புதுவை வழக்கிலும் இப்படித்தான் தாமதம் ஆனது. அது நியமன உறுப்பினர் விவகாரம் என்பதால் பிரச்னை இல்லை. அதுவும் புதுவைக்கு ஒரு தீர்ப்பு தமிழகத்திற்கு ஒரு தீர்ப்பு என்றால் சாமானியன் குழம்பித்தான் போவான். எங்கோ தவறு நிகழ்கிறது.
ஆனால் இங்கு ஒன்பது மாதங்களாக ஒரு அரசின் மீது பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்ற கேள்வியுடன் விடை கிடைக்காமல் அரசு இயங்கி வருகிறது . நம்பிக்கை வாக்கு கோராமலேயே எத்தனை காலம் முடியுமோ அத்தனை காலம் ஓட்ட இந்த அரசு நினைக்கிறது.
மத்திய அரசும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வரும்வரை இந்த தலையாட்டிகள் ஆட்சியை நீட்டிக்க விரும்புகிறது.
ஆறு மாதத்திற்கு முன்பு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் படுத்தி இந்த தலையாட்டிகளுடன் கூட்டு வைத்து காலூன்ற முயற்சிக்கும் மோடியின் அரசு.
அரசியல் கட்சிகள் சூதாட்டம் ஆடலாம்.
அதற்கு நீதிமன்றங்கள் துணை போகலாமா?
This website uses cookies.