தங்களுக்கு வேண்டியவர்களை குறுக்கு வழியில் பணி நியமனம் செய்ய மோடி அரசு கையில் எடுத்திருக்கும் ஆயுதம்தான் ‘லேட்டரல் என்ட்ரி’ முறை நியமனங்கள்.
அரசு உயர் பதவிகளில் மேல் சாதிக்காரர்கள் ஆதிக்கம் எப்போதும் போல் கோடி கட்டிப் பறக்கும்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவர்கள் என்ற காரணம் காட்டி நேரடியாக அரசு உயர் பதவிகளில் நியமிக்கும் வேலையை கடந்த ஆண்டே மோடி அரசு துவங்கியது.
மத்திய பணியாளர் தேர்வாணையம் மூலம் செய்ய வேண்டிய நியமனங்களை மடை மாற்றி நேரடியாக நியமிக்க மேற்கொள்ளும் தவறான வழி இது. நீதிமன்ற பரிசோதனையில் இது நிற்குமா என்பது இனிதான் தெரியும்.
ஏன் அப்படி ஒரு முறையை அமுல்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு என்ன பதில்?
இணைசெயலர்கள் மட்டுமின்றி துணை செயலர்களையும் இதே முறையில் நியமனம் செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர். அப்படி செய்தால் 60% வேலைவாய்ப்புகள் தனியார் துறையில் வேலை பார்க்கும் திறமை மிக்கவர்கள் என்று இவர்கள் அடையாளம் காணும் நபர்களுக்கே கிடைக்கும்.
காலம் காலமாக வெளிப்படைத் தன்மை இல்லாமல் மற்றவர் வாய்ப்புகளை பிடுங்கி வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் இப்போது அதிகாரம் வந்ததும் அதே வாய்ப்பு பறிக்கும் திட்டத்தை அமுல்படுத்த துணிந்து விட்டார்கள்.