விவசாயிகளுக்கு ஆண்டுக்கு Rs.6000 மோடி கொடுப்பது லஞ்சமா? சாதனையா?

modi-farmers
modi-farmers

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு Rs.6000 மோடி கொடுப்பது லஞ்சமா?

தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆண்டுக்கு  எட்டாயிரம் , ஓடிசாவில் நவீன் பட்நாயக் ஆண்டுக்கு பத்தாயிரம் கொடுத்தால் நான் ஆண்டுக்கு ஆறாயிரம் கொடுப்பேன் என்று மோடி விவசாயிகளுக்கு நிவாரணம் அறிவித்திருக்கிறார்.

ஓடிசாவில் குத்தகைதாரர்களுக்கு கிடைத்திருக்கும் நிவாரணம் தெலுங்கானாவிலும் மோடி அறிவித்திருக்கும் திட்டத்திலும் இல்லை.

நாடு முழுதும் 12 கோடி விவசாயிகளும் தமிழ்நாட்டில் மட்டும்   75லட்சம் விவசாயிகளும் பயனடைவார்கள் என்று எதிர்பார்ப்பு.

மத்திய அரசுக்கு 75 ஆயிரம் கோடி செலவு.  முதல் தவணையாக  ரூபாய் 2000  வீதம் ஒரு கோடி பேருக்கு வழங்கப் பட்டு விட்டது.

கருப்பு தினம் என்று ப.சிதம்பரம் விமர்சித்து இருப்பது முழுவதும் தவறல்ல.  ஏனென்றால் மோடியின் நோக்கம் பாராளுமன்ற தேர்தலில்  வாக்குகளை வாங்குவதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை.  அது லஞ்சம்தானே .

இன்னும் மெருகேற்றப்பட வேண்டிய திட்டம் இது. ஆனால் ஏதோ மோடி விவசாயிகளின் நண்பன் என்ற தோற்றத்தை  இது உருவாக்கி விடும் என்று பாஜக நம்பினால் ஏமாந்துதான்  போவார்கள்.

மோடி  அரசு கார்பரேட் அரசு என்பது எல்லாருக்கும் தெரியும். அந்த தோற்றத்தை உடைக்க எந்த முயற்சியையும் மோடி செய்ய  வில்லை.  இருந்து விட்டுப் போகட்டுமே என்று தான் நினைக்கிறார். அதனால் வாக்குகள் வருவது நின்று  விடப் போவதில்லை என்பது அவரது நம்பிக்கை.

ஒருவேளை  தேர்தல் நேரத்துக்கு முன்னால் செய்திருந்தால் மக்கள் நம்பியிருப்பார்கள். இப்போதும் வாங்குவதில் ஆர்வம காட்டும் அத்தனை  பேரும் மோடிக்கு வாக்களித்து விடப் போகிறார்களா என்ன?

மோடி மீது   விவசாயிகளின் நண்பன் என்ற பெயரை  விட மதவாதி ,மாநில உரிமை பறிப்பாளர் , கார்பரேட் ஆதரவாளர்  என்ற முத்திரைதான் ஆழமாக பதிந்து விட்டது.

உண்மையிலேயே விவசாயிகளின் நண்பன் என்றால் விளைபொருட்களுக்கு கட்டுபடி ஆகக் கூடிய லாப விலை நிர்ணயித்திருக்க வேண்டும்.  அதற்கு இவர் நிர்ணயித்திருக்கும் கெடு இன்னும் மூன்றாண்டுகள். ஏன் ஆட்சியில்  இருந்த ஐந்தாண்டுகளில் செய்ய  வில்லை?

நோக்கம் பழுது

காரியம் நல்லது

எனவே வரவேற்போம்.