சர்வாதிகாரத்தை நோக்கி நாடு பீடு நடை போடுகிறது!
தலைமை தாங்குவது பாஜக. அதைத்தான் இன்றைய அமித் ஷாவின் பேச்சு காட்டுகிறது.
‘2014ல் மத்தியில் மோடி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு எங்கு பார்த்தாலும் பெருங்குழப்பம் நிலவியது. எல்லைகளில் பாதுகாப்பற்ற நிலை இருந்தது. பல கட்சி ஜனநாயக அமைப்பில் மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எங்கு பார்த்தாலும் ஏமாற்றம் காணப்பட்டது. மக்கள் அளித்த வரலாற்று வெற்றி 30 ஆண்டுக்கால கூட்டணி அரசு என்ற சகாப்தத்துக்கு முடிவு கட்டியது. ‘
இதுதான் அமித் ஷா பேச்சின் சாரம்.
பாஜக அல்லாமல் வேறு கட்சி இருக்கக் கூடாது என்று பாஜக இன்று கூறவில்லை. காங்கிரஸ் அல்லாத பாரதம் என்ற முழக்கத்தை என்றோ எழுப்பிவிட்டது அது. அதாவது காங்கிரஸ் வேறு கட்சி அகில இந்திய ரீதியில் பாஜகவை எதிர்க்கக் கூடிய கட்சி ஒன்று இல்லை.
எனவேதான் காங்கிரசை ஒழித்துக் கட்டி விட்டால் தங்களுக்கு எதிரியே இல்லை என்று பாஜக நினைத்தது. அது உண்மைதான். ஏறத்தாழ அதில் பாஜக வெற்றியும் பெற்றுவிட்டது. காங்கிரஸ் அகில இந்திய ரீதியில் மீண்டு வரும் என்ற நம்பிக்கை தேய்ந்து வருகிறது.
எனவே இன்று இருக்கும் ஒரே மாற்று அகில இந்திய ரீதியில் பாஜகவுக்கு மாற்றாக எதிர்க்கட்சிகள் இணைய முடியுமா என்பதுதான்.
முடியும் என்பதற்கான வாய்ப்புகள் பெருகி வருகின்றன.
பாஜக தோற்கும் என்பதற்கு ஆரூடம் தேவையில்லை.
அறம் அதை தோற்கடிக்கும்.
ஏனெனில் பாஜகவிடம் அறம் இல்லை.
சுயமரியாதை, பகுத்தறிவு, சமூக நீதி, இன உணர்ச்சி, மொழி உரிமை இந்த ஐந்திலும் பாஜக வுக்கு இருக்கும் நிலைப்பாடுகள் அறத்திற்கு எதிரானவை.
எனவே பாஜக தோற்கும். மக்கள் தங்கள் கடமையை விழிப்புணர்வுடன் செய்தால் போதும்.
வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அதிபர் ஆட்சிமுறையை கொண்டுவர முயற்சித்தார்கள். நடக்கவில்லை. மோடி காலத்தில் அதற்கான வாய்ப்புகள் பெருகி இருக்கின்றன என்று அவர்கள் நம்புகிறார்கள்.
பாஜக வுக்குத்தான் தனி பெரும்பான்மை இருக்கிறதே பிறகு ஏன் கூட்டணி கட்சிகளுக்கு இடம் தருகிறீர்கள். ஒருமுறை தனி ஆட்சி நடத்துங்கள். எதிர்ப்பு வலுக்கிறதா ஆதரவு பெருகுகிறதா என்பதை பிறகு பாருங்கள்.
சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், அகாலிதளம் போன்ற கட்சிகளுக்கு பாஜக இடம் தந்திருப்பதே பல கட்சி தேவையை உணந்திருப்பதால்தான்.
சர்வாதிகாரம் ஒருபோதும் வென்றதில்லை.