சந்தி சிரிக்கும் சிபிஐ – உட்சண்டையால் நம்பிக்கை போயே போச்சு?

indian-cbi
indian-cbi

சிபிஐ இயக்குனர் அலோக் வர்மாவும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவும் கட்டாய விடுப்பில் அனுப்பப் பட பொறுப்பு இயக்குனராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப் பட்டுள்ளனர்.

காரணம் பரஸ்பர குற்றச்சாட்டு. சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த வழக்கில் இறைச்சி ஏற்றுமதியாளர் மொயின் குரேஷிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரித்து வந்தது.

ராகேஷ் அஸ்தானா தலைமையில் இருந்த குழுவில் துணை கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் இடம் பெற்றிருந்தார்.

இந்த வழக்கில் ஹைதராபாத் தொழில் அதிபர் சதீஷ் சனா குற்றம் சாட்டப் பட்டிருந்தார். இவரை வழக்கில் இருந்து விடுவிக்க இடைத்தரகர் மனோஜ் பிரசாத்  என்பவரிடம் இருந்து அஸ்தானாவுக்கு ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக வழக்கு.

இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கை சிறப்பு இயக்குனர் மீதும் தேவேந்திர குமார் மீதும் பதியப்பட்டு தேவேந்திர குமார் கைது செய்யப் பட்டார்.

இதே வழக்கில் அலோக் வர்மா இரண்டு கோடிரூபாய் லஞ்சம் பெற்றதாக அஸ்தானா புகார் தெரிவிக்க விவகாரம் முற்றிப்  போய் இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பி வேறு ஒருவரை இயக்குனராக நியமித்த அவலம் நடந்தேறியுள்ளது.

இருவர் மீது மட்டுமல்ல இவர்களின் கீழ் வேலை பார்த்த ஏராளமானவர்கள் இட மாற்றம் செய்யப் பட்டிருக்கிறார்கள்.

மத்திய அமைச்சரவையில் இருக்கும் சிலர் தாங்கள் தேர்தலுக்குப் பின் மோடிக்கு பதில் வேறு ஒருவரை கொண்டுவர சதி திட்டம் தீட்டி இந்த செயலில் ஈடுபட்ட தாக சுப்பிரமணியன் சாமி கூறுகிறார்.

ரபேல் விமான ஊழல் சம்பந்தமான ஆவணங்களை கேட்டதால் தான் அலோக் வர்மா விடுப்பில் அனுப்பப்பட்டதாகவும் செய்திகள் உலா வருகின்றன.

அஸ்தானா நியமனத்திற்கு அலோக் வர்மா ஆட்சேபித்தாலும் அதையும் மீறி மத்திய அரசு வேண்டுமென்றே அஸ்தானாவை நியமித்தது. இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெற இருக்கும் வர்மாவுக்கு அடுத்ததாக அஸ்தானாவை  கொண்டு வர திட்டம்.

சிபிஐ-ன் நம்பகத் தன்மை இந்த சம்பவங்களில் சிதைந்தே போனது.

பிரதமரின் நேரடிப் பார்வையில் இயங்கும் அமைப்பில் இத்தனை அரசியலா ?

இதற்குப் பொறுப்பு ஏற்க வேண்டியவர் யார்? கட்டாய விடுப்பில் அனுப்பப் பட்டவர்கள் நீதிமன்றம் சென்று இருக்கிறார்கள்.

எல்லாவற்றுக்கும் சிபிஐ விசாரணை கேட்கும் அரசியல் கட்சிகள் இனி கேட்குமா?

நிலுவையில்  இருக்கும் சிபி ஐ வழக்குகள் என்னவாகும்?

சிஇஐ-ல் அரசியல் நிர்பந்தம் இருக்கும் என்று ஓரளவு நிரூபணம் ஆகிவிட்டது.

எப்படியும் இந்த பிரச்னை உச்ச நீதிமன்றம் செல்லும். அங்கும் என்ன ஆகும் என்று பார்க்க வேண்டும்.

மோடியும் அமித் ஷாவும் சிபி ஐ யை பிரித்து எடுத்து விட்டதாக காங்கிரஸ் குற்றம் சாட்ட பதிலுக்கு பாஜக-வும் இதில் காங்கிரஸ் அரசியல் செய்வதாக் குற்றம் சாட்டுகிறது.

அயல்நாடுகளில் பதுங்கி இருக்கும் விஜய் மல்லையா நீரவ் மோடி போன்றவர்கள் மீதான வழக்குகள் இனி என்ன ஆகும் என்ற கேள்வியும் பூதாகரமாக வெடித்து கிளம்புகிறது.

குட்கா வழக்கு இனி வேகம் பிடிக்குமா? முடங்கிப்போகுமா?

சிபிஐ மீது பொது மக்களுக்கு நம்பிக்கை பிறக்க இனி வெகு காலம் பிடிக்கும்.