நீட் தேர்வில் மத்திய அரசோடு சேர்ந்து மாநில அரசும் மாணவர்களை ஏமாற்றுகிறது ?

neet bjp
neet bjp

நீட் தேர்வு வேண்டாம் என்று தமிழக சட்ட மன்றம் நிறைவேற்றிய சட்டத்தையோ  ஓராண்டிற்கு விலக்களிக்கும் அவசர சட்டத்தையோ மத்திய அரசு கொஞ்சமும் மதிக்காமல் காலில் போட்டு மிதித்து விட்டது.

கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருப்பதே தவறு.    முன்பு போல் மாநில பட்டியலுக்கு மாற்றப் பட வேண்டும் என்று கோரிக் கொண்டிருக்கும் நிலையில் மாநில அரசின் கருத்துக்களை மதிக்காமல் தான் மட்டுமே முடிவெடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்க வில்லை.

அனிதாவின் மரண தியாகம்  எந்த விளைவையும் இந்த மண்ணில் ஏற்படுத்த வில்லையா?

இந்த ஆண்டு மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் ஐந்து பேருக்கு மட்டுமே இடம் கிடைத்த நிலையில் வரும் ஆண்டுகளில் அதுகூட கிடைக்குமா என்ற கேள்வி பூதாகாரமாக எழுந்து வருகிறது.

412  இடங்களில் நீட் மற்றும் ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி மையங்கள் அமைக்கப் படவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்திலும்  வீடியோ கான்பரன்சிங் முறையில் அரசுப் பள்ளிகளில் பயற்சி அளிக்கப் படுமாம்.   ஏன் அதற்கென தனியாக ஆசிரியர்களை நியமிக்க அரசுக்கு மனமில்லையா? நிதியில்லையா?

தனியார் பள்ளிகளில் இரண்டு லட்சம் கொடுத்து நேரடியாக பயிற்சி எடுக்கும் மாணவர்களோடு இவர்கள் போட்டி போட முடியுமா?

நீட் கோச்சிங் மையங்கள் பணம் கொழிக்கும் தொழிலாக மாறிவருகிறது.

அதற்கு மாநில மத்திய அரசுகளின் கொள்கைகள் தான் காரணம்.

ஏறத்தாழ இருபதாயிரம் மாணவர்கள் பங்கு பெற வாய்ப்புள்ள தேர்விற்கு தமிழ்நாட்டுக்கு ஆறு மையங்கள் தானாம்.    இந்த ஆறு மையங்களில் கலந்து  கொள்ள வாய்ப்பில்லாதவர்கள் மற்ற மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களுக்கு ஓடிச்சென்று பங்கேற்க வேண்டும்?      ஏன் இந்த இழிநிலை?        போதுமான தேர்வு மையங்களை கூடவா மாநில அரசு ஏற்பாடு செய்ய முடியாது.?

நீட் தேர்வு கூடாது என்ற கொள்கையில் இருந்து தமிழக அரசு பின் வாங்கி விட்டதா?

பொதுப்பட்டியலில் இருந்தும் கூட மாநில அரசின் கருத்துகள் செல்லுபடியாகாது என்பது  அரசியல் அடிமைத்தனத்தை மாநில அரசு ஏற்றுக் கொண்டு விட்டது என்றே பொருள்.

என்று மாறும் இந்த அடிமைகள் ஆட்சி என்று மக்கள் கொந்தளிக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.