மனித வள மேம்பாட்டு அமைச்சரகத்தின் கீழ் இயங்கும் சி பி எஸ் இ நீட் தேர்வை அதன் பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்துகிறது.
இதனால் மாநில பாடத்திட்ட மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள் என்பது சென்ற ஆண்டு சி பி எஸ் இ பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப் பட்ட நீட் தேர்வின் முடிவுகளில் நிரூபணம் ஆனது.
தமிழக மாணவர்கள் மருத்துவர்கள் ஆகும் வாய்ப்பை தட்டிப் பறித்தது நீட் தேர்வு!
சி பி எஸ் இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநில பாடத் திட்டத்தை மாற்றுவோம் என்றும் நீட் தேர்வை எதிர் கொள்ள பயிற்சி மையங்கள் அமைப்போம் என்றும் சொல்லி மக்களை ஏமாற்றும் நோக்கத்திலேயே மாநில அரசு இயங்கியது.
இவர்களை சமாதானப் படுத்தும் விதமாக மத்திய அமைச்சர் ஒருவர் இனி நீட் தேர்வு மாநில பாடத் திட்டங்களில் இருந்தும் இணைத்து நடத்தப் படும் என்று அறிவித்தார்.
இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக சி பி எஸ் இ ஒரு பொது அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அதாவது ‘நீட் 2018 தேர்வின் பாடத்திட்டம் நீட் 2017 ஆண்டில் இருந்தது போலவே இருக்கும் ‘ என்று சொல்கிறது. அதாவது இந்த ஆண்டும் சி பி எஸ் இ பாடத் திட்ட அடிப்படையிலேயே நீட் தேர்வு இருக்கும்.
மற்ற மாநிலத்தவர்கள் மருத்துவர்கள் ஆக வாய்ப்பு மறுக்கும் இந்த பார பட்ச நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது மட்டுமல்ல. மாநில உரிமைகளுக்கு எதிரானதும் கூட.
கல்வி மாநிலப் பட்டியலுக்கு மாற்றப் பட்டால் மட்டுமே இது சாத்தியம் ஆகும்.
நமது மருத்துவர்களை நாமே உருவாக்கிக் கொள்ள முடிய வேண்டும். அதுவே மாநில உரிமை.
மாநில பட்டியலில் இருந்த கல்வியை மத்திய பட்டியலுக்கு அவசர நிலையின் போது இந்திரா காந்தி மாற்றியது ஒரு துரோகம்.
மாநிலங்களுக்கு துரோகம் செய்து விட்டு ஒரே நாடு என்று சொல்லிக் கொண்டு உங்களை கொள்ளையடிப்போம் என்று சட்டப் படி வெளிப்படையாக கொடுமை செய்கிறார்கள்.
இதற்கு உச்ச நீதி மன்றம் கூட ஒரு விதத்தில் துணை போயிருக்கிறது.
நீட் பயிற்சி கொடுக்கிறோம் என்று கொள்ளையடிக்கும் கூட்டம் பெருகி வருவதுதான் நடக்கிறது.
பிறகு என்ன செய்யத்தான் இந்த பள்ளிகள் இயங்குகின்றன? இவைகள் நடத்தும் தேர்வில் தேறிய மாணவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கிறது?
தொடரும் இந்த கொடுமையை தமிழக அரசியல் கட்சிகள் எவ்விதம் எவ்விதம் எதிர் கொள்ளப் போகின்றன?