ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் எதற்காக கொண்டு வரப்படுகிறது?
நம் கெட்ட நேரம். இங்கே இருக்கும் அரசு நம் உரிமைகளை பாதுகாக்கும் அரசாக இல்லை.
பொதுவிநியோகம் பொதுப்பட்டியலில் உள்ளது. தமிழகத்தில் நல்ல முறையில் நாட்டுக்கே வழி காட்டும் வகையில் பொது விநியோக திட்டம் அமுலில் உள்ளது.
ஏறத்தாழ இரண்டு கோடி குடும்பங்களுக்கு குடும்ப அட்டை மூலம் விநியோகம் செய்வது என்பது சாதாரண காரியம் இல்லை. அதிலும் மின்னணு அட்டைகள் வழங்கப்பட்டு இருக்கிறது. இதை ஏன் மாற்ற வேண்டும்.?
மத்திய அரசு இதில் தன் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறதா? மாநில உணவுப் பழக்கங்களில் தலையிடுகிறதா? வேற்று மாநிலத்தவர் இங்கே குடிவரும்போது அவர்களுக்கு உதவ இந்த அட்டைகள் பயன்படும் என்றால் மத்திய அட்டை வழங்குங்கள். ஏன் மாநில அட்டையுடன் இணைக்க வேண்டும்?
குடும்ப அட்டை கிடைத்தவுடன் அவர்களுக்கு வாக்குரிமை கிடைக்கும். ஆக தமிழகத்தின் வாக்காளர் எண்ணிக்கையில் வேற்று மாநிலத்தவர் உள்ளே நுழைக்கப் படும் ஆபத்து இருக்கிறதா இல்லையா?
எந்த இந்தியரும் எங்கேயும் வசிக்கலாம். உண்மைதான். ஆனால் ஒரு மாநிலத்தின் தன்மையை உருக்குலைக்கும் அளவு ஊடுருவ உரிமை உள்ளதா? இது ஒரு மொழி வாரி படைஎடுப்பாக அமைந்து விடக் கூடாதல்லவா?
பொதுபட்டியலில் உள்ள உரிமையை மாநில அரசு பயன்படுத்தி வருகையில் அதை எடுத்து மத்திய அரசிடம் கொடுத்து விட்டால் மாநில உரிமையை இழந்ததாக ஆகுமா ஆகாதா?
அமைச்சர் காமராஜ் இந்த திட்டத்தில் சேரத் தயார் என்றும் அதற்கு ஒரு குழு அமைத்து அதன் படி செயல்படப் போவதாகவும் தெரிவித்து இருக்கிறார்.
14 மாநிலங்கள் சேரப்போகின்றன என்றால் நாமும் சேர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே?
ஒருவேளை அங்கும் குடியேற்றத் திட்டத்தை அரங்கேற்றப் போகிறதா பாஜக அரசு?
தமிழக அரசு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை ஏற்கக் கூடாது?