பல்லில்லை என்ற தேர்தல் ஆணையத்தை கண்டித்த உச்ச நீதிமன்றம்??!!

ELECTION-COMMISSION
ELECTION-COMMISSION

சாதி, மதம் காரணமாக வெறுப்பு அரசியல் செய்பவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று உச்ச நீதிமன்றம் கேட்டதற்கு அதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என தேர்தல் கமிஷன் அளித்த பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை.

ஏன் என்றால் இதற்கு முன் எந்த தேர்தல் கமிஷனும் தவறுகளை தடுத்தது இல்லை.    எல்லாம் முடிந்த பின் எங்களால் தடுக்க முடியவில்லை என்று ஒரு அறிக்கை கொடுப்பார்கள். அவ்வளவுதான்.

தேர்தல் நடத்தை விதிகள் எல்லாம் பெயரளவுக்குத்தான் .

தேர்தல் நடைமுறைகளை யோகி ஆதித்யநாத்தும் மாயாவதியும் பாழ் படுத்தி விட்டார்கள் என்று தேர்தல் கமிஷன் சொல்கிறது.

அதிக பட்சம் எங்களால் ஒரு அறிவிப்பு அனுப்பி விளக்கம் கேட்டு அதில் தவறு இருந்தால் அறிவுரை கூற முடியும் என்று தேர்தல் ஆணையம் பதில் சொன்னது.

அறிவுரை சொல்வதால் என்ன ஆகிவிடப் போகிறது? அதை அவர்கள் கேட்க வில்லை என்றால் யார் தண்டிப்பது?

உச்ச நீதி மன்றம் தானே முன்வந்து, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவுகள் 123(3) மற்றும் 125ன் படி யாராவது வேட்பாளரோ அவரது பிரதிநிதியோ மதத்தின் பேரால் வேண்டுகோள் விடுத்தாலோ வெறுப்பை தூண்டும் வகையில் பேசினாலோ அவரை தகுதி நீக்கம் செய்யம் முடியும் என்பதை சுட்டிக் காட்டி தேர்தல் கமிஷன் ஏன் அதன்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்று கேட்டு விசாரணையை ஒத்திவைத்தது.

அப்படிப்பார்த்தால் முதலில் பிரதமர் மோடி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரைத்தான் தகுதி நீக்கம் செய்ய வேண்டும். செய்யுமா தேர்தல் ஆணையம்?

“நான் சாமியார். நான் ஒட்டு கேட்கிறேன். கொடுக்கவில்லையென்றால் உங்களுக்கு பாவம் சம்பவிக்கும். நான் என்ன உங்கள் சொத்தையா கேட்கிறேன்” என்று மதத்தின் பேரால் ஒட்டுக் கேட்கும் சாக்ஷி மகராஜ் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா?

உச்சநீதி மன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னும் சபரிமலை பாரம்பரியத்தை காப்பாற்றியே தீருவேன் என்கிறார் மோடி. அதற்கு அரசியல் சாசன பாதுகாப்பை தேடித் தருவேன் என்கிறார். அரசியல் சாசனத்தை திருத்தப் போகிறாரா? எப்படி திருத்தப் போகிறார்? என்ன திருத்தம்? முற்று முழுதும் மத பிரச்னைகளை பரியே பேசி வாக்குக் கேட்கிறது பாஜக. என்ன நடவடிக்கை எடுக்க முடியும்.?

கடந்த 30 ஆண்டுகளாக ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் கூட குஜராத்தில் இருந்து தேர்தெடுக்கப்படாமல் பார்த்தக் கொள்கிறது பாஜக. அது எப்படி அனைத்து மக்களுக்குமான கட்சியாகும்?

சூழ்ச்சியும் வஞ்சகமும் செய்வதற்குதானா தேர்தல் ஆணையம்? பாஜக – அதிமுக – தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து இந்த தேர்தலை சந்திக்கிறார்கள் என்ற முத்திரை வலுவாக விழுந்து விட்டது.

பாஜக சுட்டிக் காட்டும் நபர்கள் மீது வருமான வரித்துறை ஏவப்படுகிறது. ஏதோ ஆளும் கட்சிகாரர்கள் மட்டும் புனிதர்கள் போல. எல்லாருக்கும் ரூபாய் 2000 கொடுத்து விட்டார்கள் ஆளும் கட்சிக்காரர்கள். எல்லா மக்களுக்கும் இந்த உண்மை தெரியும். ஆனால் எதிர்கட்சிக்காரன் ரூபாய் 300 கொடுக்க முயற்சித்தான் என்று வழக்கு? யார் எவ்வளவு கொடுத்தாலும் தவறுதான். அதாவது நடவடிக்கை இரண்டு பேர் மீதும் எடுக்கப்பட்டால்.

தன் மீது பழி வந்து விட அனுமதிக்கக் கூடாது என்ற உணர்வு தேர்தல் ஆணையத்துக்கு இல்லவே இல்லை.

வேலூரில் மட்டும் பாராளுமன்ற தேர்தலை நிறுத்தி வைத்திருக்கிறதே தேர்தல் ஆணையம் யார் சொல்லி?

உயர் நீதிமன்றம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.

மக்களின் நம்பிக்கையை சுத்தமாக இழந்து விட்டது தேர்தல் ஆணையம்.   

அத்தகைய அமைப்பு நடத்தும் தேர்தல் மீது மக்களுக்கு எந்த அளவு நம்பிக்கை வரும்??