தமிழக மீனவர்கள் 8 பேருக்கு இலங்கை நீதிமன்றத்தால் தலா ரூபாய் 60 லட்சம் அபராதம் விதித்து தீர்பளிக்கப் பட்டிருக்கிறது ?!
சென்ற ஆகஸ்ட் மாதம் பாம்பனில் இருந்து இவர்கள் இருபது கடல் மைல் களுக்கு உள்ளே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கைது செய்திருக்கிறது.
4.8 கோடி அபராதம் செலுத்தும் நிலையில் மீனவர்கள் இல்லை. அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப் பட்டுள்ளன.
சுப்பிரமணிய சாமி சொன்னது நடந்து கொண்டிருக்கிறது.
அவர்தான் சொன்னார். படகுகளை கைப்பற்றிக் கொண்டு மீனவர்களை விட்டு விடுங்கள் என்று. இலங்கை அரசு அபராதமும் விதித்து தண்டிக்கிறது.
இந்திய அரசும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடிக்காதீர்கள் என்கிறது.
மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் கடமை இந்திய அரசுக்கு இருக்கிறதா இல்லையா?
பாகிஸ்தான் மீனவர்கள் இந்தியாவிலும் இந்திய மீனவர்கள் பாகிஸ்தானிலும் சிறைகளில் இருந்து மீள்வது நடந்துகொண்டுதான் இருக்கிறது.
ஆனால் இந்திய அரசு தமிழக மீனவர்களை கண்டு கொள்வதே இல்லை.
மீன் பிடித்தொழிலில் இருந்து மீனவர்கள் விலகி கடற்பரப்பை வியாபாரிகளுக்கு விட்டு விட்டு வேறு தொழிலுக்கு மாறினால்தான் இவர்களுக்கு மகிழ்ச்சி. அதுவே இவர்களின் இலக்கு என்பதாகத்தான் தோன்றுகிறது இவர்கள் தமிழக மீனவர்களை அணுகும் விதம்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருக்கிறார்கள்.
இந்திய அரசு என்ன செய்கிறது என்பதை பொறுத்திருந்து பார்த்து விட்டு அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தயாராகிறார்கள் மீனவர்கள்.
கச்சதீவை மீட்காமல் மீனவர்கள் பிரச்னை தீரப்போவது இல்லை.
கச்சத்தீவை இந்திய அரசு மீட்கப் போவதுமில்லை.
உச்சநீதிமன்றம் ஏதாவது செய்தால் தான் உண்டு.
தினம் 300 ரூபாய் சம்பாதித்துக் கொண்டிருந்தவர்கள் மீது அறுபது லட்சம் அபராதம் விதித்து அவர்களை தொழில் செய்யவிடாமல் முடக்கி விட்டது இலங்கை அரசு.
வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது இந்திய அரசு.
எதிர்காலம் ஒரு கேள்விக்குறியை மாட்டி காத்துக் கொண்டிருக்கிறது.