தமிழக மாணவர்கள் நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்டங்களை சேர்ந்த சிலருக்கு கேரளா ராஜஸ்தானில் தேர்வு மையங்களை ஒதுக்கி சிபிஎஸ்இ போட்ட உத்தரவை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இட்ட செய்தியை சென்ற ஏப்ரல் 18 ம் தேதி பொதுமேடையில் எழுதி இருந்தோம்.
இந்த உத்தரவை அடுத்து மாணவர்கள் தமிழ் நாட்டில் உள்ள பத்து மையங்களில் ஏதாவது ஒரு இடத்தில தேர்வு எழுத இ பி எஸ் இ ஏற்பாடு செய்திருக்கலாம். ஆனால் அதை செய்யாமல் தேர்வு மையத்தை கணினி தான் தேர்ந்தெடுத்ததாகவும் எனவே மாற்ற முடியாது என்றும் சி பி எஸ் இ பிடிவாதம் பிடித்து கால அவகாசம் இல்லாததால் மாற்ற முடியாது என்றும் சொல்லிக் கொண்டு உச்சநீதி மன்றத்தில் மேன்முறையீடு செய்தது.
உச்சநீதி மன்றம் அதை ஏற்றுக் கொண்டு கால அவகாசம் இல்லாததால் மாற்ற முடியாது என்றும் அடுத்த ஆண்டு முதல் தமிழகத்திலேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு தமிழக மாணவனை ராஜஸ்தான் கேரளா சென்று தேர்வு எழுத உத்தரவிட்டு தீர்ப்பளித்தது .
நீதிபதிகள் எஸ் ஏ பாப்டே மற்றும் எல் நாகேஸ்வர ராவ் இருவரும்தான் இந்த தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள்.
மேன்முறையீடு செய்த அவகாசத்தில் தமிழகத்தில் தேர்வு எழுத ஏற்பாடு செய்திருக்க முடியாதா என்று உச்சநீதி மன்றம் கேட்கவில்லை.
ஒரு மாணவனாக இருந்தாலும் பிற மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுத கட்டாயப் படுத்துவது நீதிக்கு முரணானது என்பது உச்சநீதி மன்றத்துக்கு தெரியாமல் போனதா?
ஒரு அநியாயத்தை நியாயப் படுத்தியிருக்கிறது உச்சநீதி மன்றம்.
கல் நெஞ்சுக்காரர்கள் , அக்கிரமத்தை நியாயப் படுத்து கிறவர்கள் , நீதியை குழி தோண்டி புதைக்கிறவர்கள் என்று சமுதாயம் தூற்றுமே என்று கூட கவலைப் படாமல் தீர்ப்பு எழுதுகிறவர்கள் இருக்கிறார்களே என்றுதான் நாம் கவலைப் படுகிறோம்.
நீதி தேவதையின் கண்களை இதற்குத்தான் கட்டி விட்டார்கள் போலும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகள் அதன் மதிப்பை நம்பிக்கையை உயர்த்த வேண்டும்.
நாம் வேண்டும் தீர்ப்பு விரும்பாத தீர்ப்பு என்றில்லை. நியாய ம் என்றால் யாருக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
ஆனால் இந்த தீர்ப்பை நியாயம் என்று ஏற்றுக் கொள்ளவே முடியாது. அப்படி என்றால் சென்னை உயர் நீதி மன்றம் கொடுத்த தீர்ப்பு தவறானதா?
நியாயம் இருப்பதால் தானே அடுத்த ஆண்டு முதல் தமிழகத்துக்கு உள்ளேயே தேர்வு எழுத ஏற்பாடு செய்ய உத்தரவிட்டு இருக்கிறீர்கள்.
இந்த ஆண்டு மட்டும் கொலை செய்து கொள்ளட்டும் என்று அனுமதிப்பது போல் அல்லவா இருக்கிறது தீர்ப்பு.
பல நேரங்களில் நம்பிக்கையை கொடுக்கும் உச்ச நீதி மன்றம் சில நேரங்களில் இது போன்ற வெறுக்கத் தக்க தீர்ப்புகளையும் அளிப்பது வருந்தத் தக்கது.