தேர்தலில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்த மத்திய ஆளும் கட்சி தேர்தல் ஆணையம் மூலம் தேர்தலை ரத்து செய்வதாக அறிவித்து மிரட்ட திட்டம் தீட்டி இருப்பதாக தெரிகிறது.
வேலூரில் துரைமுருகன் வீட்டிலும் அவரது கல்லூரியிலும் நடத்திய தேடுதல் வருமான வரித்துறை நடத்தியதாகத்தான் செய்திகள் தெரிவிக்கின்றன.
தேர்தலில் பணம் தவறாக பயன்படுத்த முயன்றால் அதை தடுக்க செலவின பார்வையாளர்களை தேர்தல் கமிஷன் நியமித்துள்ளது.
அவர்களுக்கு எங்கு வேண்டுமானாலும் சென்று ஆய்வு செய்ய உரிமை இருக்கிறது. ஆனால் வருமான வரித்துறை தேர்தல் காலத்தில் அந்த வேலையை செய்யும்போதுதான் சந்தேகம் வருகிறது.
வருமான வரித்துறை தன் பணிகளை தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள எந்த சட்டபூர்வ தடையும் இல்லைதான்.
அந்த சோதனையை ஏன் அவர்கள் துல்லிய தாக்குதல் போல் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது மட்டும் பாய்ச்சுகிறார்கள் என்பதுதான் கேள்வி?
ஆளும் கட்சி பணபலம் இல்லாமல்தான் இந்த தேர்தலை சந்திக்கிறதா?
துரைமுருகன் வீட்டிலும் கல்லூரியிலும் நடத்திய சோதனையை யாரும் கேள்வி கேட்கவில்லை. அதில் எந்த அளவு உண்மை இருக்கிறது எல்லாம் சட்டப்படிதான் நடந்திருக்கிறதா அல்லது ஏதாவது விதிமீறல்கள் உள்ளனவா என்பதெல்லாம் இனிதான் தெரியவரும்.
அரவக்குறிச்சியில் சென்ற சட்ட மன்ற தேர்தலின்போது அன்புநாதன் என்ற அதிமுக பிரமுகரின் வீட்டில் பிடிபட்ட நான்கு கோடி ரூபாய் தேர்தலுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்ட பணம்தான் என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்து தேர்தலை ரத்து செய்தது.
அதேபோல் வேலூரிலும் இன்னும் சில தொகுதிகளிலும் ஏதாவது காரணத்தை காட்டி தேர்தலை ரத்து செய்ய கமிஷன் முடிவு செய்தால் அது ஜனநாயகத்தின் மீதான தாக்குதலாகத்தான் பார்க்கப்படும்.
என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளட்டும். அது சட்ட பூர்வமானதா இல்லையா என்பதை நீதிமன்றம் ஆராயட்டும். ஆனால் தேர்தல் ரத்து என்ற முடிவை ஆணையம் எடுக்கக்கூடாது.
எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் மன்றம் தீர்மானிக்கட்டுமே!!!