முஸ்லிம் நகர மாவட்ட பெயர்களை மாற்றும் முயற்சியில் பாஜக ஆட்சி தீவிரமாக இருக்கிறது.
குறிப்பாக உ.பி.யில் முதல்வர் ஆதித்ய நாத் மிகவும் தீவிரமாக முஸ்லிம் பெயர்களை கொண்டிருக்கும் நகரங்களின் பெயர்களை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
வளர்ச்சியே எங்கள் இலக்கு என்று சொல்லிக்கொண்டே வரலாற்றை மாற்ற முயற்சிப்பது என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதை விட என்ன சாதிக்கப் போகிறது என்பதே கேள்வி.
ஆக்ரா-வை அகர்வால் அல்லது ஆக்ராவன்; முசாபர் நகரை லட்சுமி நகர் ; சிம்லாவி ஷ்யாமளா,; அலஹாபாத் நகரை கர்னாவதி; அவுரங்காபாத் நகரை சாம்பாஜி நகர்; உச்மானாபாத் நகரை தாராசிவ் நகர் என்றெல்லாம் பெயர் மாற்றம் செய்யப் போகிறார்கள்.
கடந்த பல நூற்றாண்டுகளில் நாம் பலரால் ஆளப்பட்டிருக்கிறோம். அதெல்லாம் வரலாறுகள். மாற்றப் பட முடியாதது. இன்று விடுதலை அடைந்து இருக்கிறோம் என்பதே உண்மை. வரலாற்றை மாற்றுகிறோம் என்று நாம் மீண்டும் ஐம்பத்தாறு தேசமாக மாற முடியுமா?
உலக நாடுகள் பலவும் தங்கள் பெயர்களை மாற்றி கொண்டிருக்கிறது. பர்மா மியான்மர் எனவும் சிலோன் ஸ்ரீ லங்கா எனவும் பெர்சியா ஈரான் எனவும் பெயர்கள் மாறியிருக்கின்றன. ஆனால் அதையெல்லாம் இப்போது பாஜக வின் நோக்கத்தோடு ஒப்பிட முடியாது.
தமிழ்நாட்டில் எத்தனையோ மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறோம். ஆனால் அவையெல்லாம் எவரையும் இழிவு படுத்தும் நோக்கம் கொண்டதல்ல.
டன்சூர் தஞ்சாவூர்; டிருச்சி திருச்சி; கொல்ரூன் கொள்ளிடம்; டுடிகோரின் தூத்துக்குடி; என்று ஆங்கிலப் பெயர்களை தமிழ் படுத்தும் முயற்சியே இன்னும் முற்றுப் பெறவில்லை.
மெட்ராஸ் சென்னை ஆவதில் ஒன்றும் தவறில்லை.
ஆனால் முஸ்லிம்கள் நம் நாட்டவர் அல்ல அவர்கள் படை எடுத்து வந்தவர்கள் என்பதை நிலை நாட்டுவதே நோக்கமாக இருந்தால் யார் படை எடுத்து வந்தவர்கள் என்ற வரலாற்று குறிப்புகளை ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படும்.
அப்படி ஆராய்ந்தால் ஆரியர்கள் என்று தங்களை கூறிக்கொள்வோர் பெர்சியாவில் இருந்து குடி ஏறியவர்கள் என்று நிலை நாட்டப் பட்டதால் இன்றைய பிராமணர்கள் எல்லாருமே அயலார்தான்.
யார் பூர்வ குடி என்று ஆராய்ந்தால் மிச்சமிருப்போர் எண்ணிக்கை சொற்பம் தான்.
இருக்கும் மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தி அனைவருக்கும் நல்வாழ்வு தேடிக்கொடுப்பதே ஆட்சியாளர்களின் கடமை.
யார் பெரியவர் என்று நிலைநாட்ட பெயர் மாற்றத்தை பயன் படுத்துவதை வெளிச்சம் போட்டு காட்டியது உபி.
அங்கு சமாஜ்வாதி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மேற்கு உபி இன் ஒரு மாவட்டத்திற்கு ஹாத்ராஸ் என்று பெயரிடும். மாயாவதி ஆட்சிக்கு வந்தால் உடனே அதை மஹாமாய நகர் என்று மாற்றுவார். மஹாமாய புத்தரின் தாயின் பெயர். மீண்டும் சமாஜ்வாதி ஆட்சிக்குக் வந்து ஹாத்ராஸ் என்று மாற்றுவதும் அதை மாயாவதி மீண்டும் மாற்றுவதும் என்று இந்த வேடிக்கை நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கிறது.
சாதி மதங்களிடையே பேதங்களை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் அடைய பெயர் மாற்றங்களை பயன்படுத்துவது கேவலமான போக்கு. அது நீடிக்கக் கூடாது.