உச்ச நீதிமன்ற தீர்ப்பு திருத்தப் படவேண்டும்?!
சட்டிச்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் குஜராத், மேற்கு வங்கம், ஜார்கண்ட், மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் கணிசமாக பழங்குடிகள், தலித்துகள் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறார்கள்.
வனப்பாதுகாப்பு சட்டத்தின் படி அவர்கள் கோரிய நில உரிமையை உச்சநீதி மன்றம் நிராகரித்து உத்தரவிட்டதால் அவர்கள் காட்டை விட்டு வெளியேற்றப் படும் நிலை உருவாகி இருக்கிறது.
பழங்குடிகள் தலித்துகள் உரிமை பாதுகாப்புக்கென தனி அரசு அமைப்புகள் இருக்கின்றன. இவைகள் தங்கள் கடமையை செய்திருந்தால், நீதிமன்றத்தில் வலிமையாக வாதாடியிருந்தால் உச்சநீதி மன்றம் இப்படி ஒரு உத்தரவை இட்டிருக்க வாய்ப்பே இல்லை.
நில உடமை ஆவணங்கள் அவர்களிடம் இல்லையென்றால் அதற்கு யார் பொறுப்பு? அரசுகள் தானே? தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருபவர் களிடம் பட்டாவை கொடு வரி ரசீதை கொடு என்று கேட்டு இல்லையென்றால் வெளியேறு என்பது என்ன நியாயம்? ஏனென்றால் ஆவணங்களை தர வேண்டியவர்கள் தவறினால் அவர்களுக்கு என்ன தண்டனை?
படிப்பறிவில்லாத அதிகாரம் இல்லாத பாமரர் களுக்கு வாழவே உரிமை இல்லையா? சொந்த நாட்டிலேயே அவர்களை அகதிகள் ஆக்குகிறீர்களே?
இன்றைக்கு மார்ச் 5 ம் தேதி பந்த் அறிவித்திருக்கிறார்கள். பாஜக – காங்கிரஸ் உள்ளிட்ட அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. என்ன ஒரு ஏமாற்று வித்தை?
அவசர சட்டம் இயற்றி எங்களை பாதுகாத்து விட்டு சட்டப்படி போராடுங்கள் என்று போராட்டக் குழு கேட்டுக் கொண்டிருக்கிறது.
மத்திய மாநில அரசுகளின் இரட்டை வேடத்தை பறை சாற்றும் நாடகம் இது.
மனிதாபிமானம் அற்ற, ஈவிரக்கம் அற்ற, கொடுமையான நடவடிக்கையை இனியாவது பாஜக -காங்கிரஸ் அரசுகள் தவிர்க்க வேண்டும்.
உடனடியாக அவர்களுக்கு தேவையான சான்றாவணங்களை கொடுத்து அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப் படுத்தும் வேலையை பாஜக -காங்கிரஸ் அரசுகள் செய்ய வேண்டும் என்பதே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு.