ஆர் எஸ் எஸ் தலைவர் ஒருவர் பத்திரிகையாளர் வினோத் ஜோஸ் என்பவரிடம் 2012 ல் நரேந்திர மோடி பற்றி ஒரு கட்டுரையில் கூறியதாக காங்கிரஸ் தலைவர் சஷி தரூர் ஓர் இலக்கிய விழாவில் பேசும்போது கூறியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.
‘அவர் சிவலிங்கத்தின் மேல் இருக்கும் தேளைப்போன்றவர். அவரை நீங்கள் கையாலும் தள்ள முடியாது . தேள் கொட்டிவிடும். காலணியாலும் அடிக்க முடியாது. இறை நிந்தையாகிவிடும். ‘அதாவது இந்துத்வா சக்திகளுக்கும் மோடிக்கும் இருக்கும் உறவுமுறை பற்றி அவர் கொண்டிருந்த கருத்தை இப்படி உவமை மூலம் பதிவு செய்திருந்தார். ”
ஆர்.எஸ்.எஸ். தலைவர் அப்படி சொன்னாரா இல்லையா என்பதை நிரூபிக்க கோரிக்கை வைக்க வேண்டிய பாஜக அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் சசி தரூர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்..
ஆர். எஸ் எஸ் தலைவர்கள் எப்படியும் பேசக் கூடியவர்கள். பேசியதை மறுத்து பேசவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தில் மன்னிப்புக் கோரவும் தயாராக இருப்பவர்கள் என்று பேர் பெற்றவர்கள்.
இது எப்படி சிவலிங்கத்தை அவமதிப்பது ஆகும் என்பது தெரியவில்லை.
‘ இந்து கடவுள்களை அவமதிப்பதை இந்த நாடு சகித்துக் கொள்ளாது. இதை சோனியாவும் ராகுலும் அங்கீகரிக்கிறீர்களா? விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் பிரசாத்.
உண்மையிலேயே ஒரு தேள் சிவலிங்கத்தின் மீது இருக்கும் பட்சத்தில் ஒரு சிவ பக்தர் காத்திருப்பதை விட என்ன செய்து விட முடியும்? அர்ச்சகரை விட்டு நீரை ஊற்றி விரட்டலாம்.
எப்படியிருந்தாலும் கற்பனையான இந்த உவமை ரசனையாக இருப்பதால் பாராட்டலாம்.